நாவல்கள் பல எழுதி ஏற்கனவே வாசகர்கள் மனதில் இடம் பிடித்துள்ள என்.சி.மோகன் தாஸின், ‘யார் அந்த நிலவு’ ஒரு பள்ளி பெண் நிர்வாகிக்கும், ஆசிரியருக்கும் இடையே நடைபெறும் மவுனப் போராட்டத்தை மையமாகக் கொண்டது.
அந்த பெண் நிர்வாகியின் மனதில் இடம் பிடிக்க அந்த ஆசிரியர் செய்யும் முயற்சிகளும், பழைய காதலியின் (நிச்சயிக்கப்பட்ட பெண்) நினைவுடன் நிர்வாகியை அணுக முயற்சி செய்வதும், அதைத் தவிர்க்க முடியாமல் அந்த பெண் நிர்வாகி, மனிதாபிமானத்திற்கும், பெண்ணுக்கே உரிய பண்பாட்டிற்கும் இடையே மனப் போராட்டம் நடத்துவதும், த்ரில்லாக உள்ளது.
மனிதாபிமானம் மற்றும் காதலின் இனிமையையும், தமிழ்ப் பெண்களின் குணத்தையும், பண்பாட்டையும் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது. கதைக்காகக் கூட நம் பண்பாட்டையும், வாழ்க்கை நெறிமுறைகளையும் மீறுவது தர்மம் அல்ல என்ற உயரிய சிந்தனையோடு எழுதப்பட்டு உள்ளது.
பண்பும், கண்டிப்பும், ஒழுக்கமும் நிறைந்த ஆசிரியர்களின் மத்தியில் இப்படியும் சிலர் இருப்பதை எடுத்துக் காட்டியிருக்கிறார். உண்மைக் கதை என்று குறிப்பிட்டிருந்தாலும், கற்பனையில் உருவானதோ என்கிற சந்தேகம் வாசகர் மத்தியில் எழுவதைத் தவிர்க்க இயலாது.
பொதுவாக கலை ஆசிரியர்கள் சாதுவாகவும், மென்மையான குணம் கொண்டவர்களாகவும் இருப்பது தான் நிஜம். விஷ்ணு எப்படி வில்லத்தனமும், கொலையும் செய்யப் போனான் என்ற சந்தேகமும் எழுகிறது. மொத்தத்தில் மனிதாபிமான பண்பாட்டுப் பெட்டகமாக இது திகழ்கிறது.
–
இளங்கோவன்