சாகித்ய அகாடமி விருது பெற்ற ஒரு கிராமத்து நதி என்ற புத்தகத்தை நாட்டுப்புறப் பார்வையில் ஆராய்ந்துள்ள நுால். வாய்மொழிப் பாடலும், புதுக்கவிதையும் பின்னிப் பிணைந்துள்ள வகையில் கிராமியச் சித்திரத்தைக் காட்டுகிறது.
இளமைக்கால நினைவலைகளை எழுதிய கவிஞர் சிற்பி, இக்கிராமியக் குறுங்காவியத்தில் இடம் பெறும் தனித்தனிப் பாத்திரங்களின் பண்பை அருமையாக விவரிக்கிறார். கிராமத்து மக்களின் அகப்புற உணர்வுகளை சித்தரிப்பதை நுணுக்கமாக எடுத்துரைக்கிறது.
ஒவ்வொரு பாத்திரங்களின் அசல் ஓவியங்கள் அழகிய கவிதைச் சிறுகதைகளாக விரிவதை விவரிக்கிறார். கொங்கு நாட்டு மக்களின் பண்பாடு, வழக்காறுகள், வாழ்வியல் கண்ணோட்டம், வட்டார வழக்கு விரிவாக அமைந்துள்ளது.
சூழல் கவிதை, நாட்டுப்புற உருக்காட்சி தலைப்புகளில் அமைந்த கட்டுரைகள் ஆய்வுத்திறனை வெளிப்படுத்துகின்றன. கவிஞர் சிற்பியின் கவிதை ஆற்றலை மண்ணின் மணத்தோடு வெளிக்கொணர்ந்துள்ள நுால்.
–
ராம.குருநாதன்