கடினமான முடிவுகளை நொடிப்பொழுதில் எடுத்து, உயிர், உடைமைகளை காக்க வேண்டிய தருணங்கள் காவல் துறைக்கு உண்டு. அதை நிறைவேற்ற, அதில் பணியாற்றுவோர் பொறி தட்டும் அறிவு படைத்தவர்களாக இருக்க வேண்டும் என்பதை விரிவாக விளக்கும் நுால். காவல் துறையில் உயர் பொறுப்பில் பணியாற்றிஉள்ளதால் துல்லியமாக எழுதியுள்ளார் ஆசிரியர்.
ஆட்சி பீடத்திலும், அரசின் முக்கிய பொறுப்பிலும் இருப்பவர்கள் அரசியல் ஆதாயத்துக்காக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவர்; எதிர்ப்பு குரலை அமைதிப்படுத்த முயல்வர். இது போன்ற செயல்களில் எடுக்கப்படும் முயற்சியே, உயர்மட்ட அமைப்புகளிடம் விசாரணையை ஒப்படைப்பதாகும்.
ஆயிரம் குற்றவாளி தப்பினாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது எனப் பெருமை பேசினாலும், தப்பித்த குற்றவாளியால் பாதிக்கப்படப் போவது சமுதாயம் தான் என்பதை மறந்துவிடக் கூடாது என எச்சரிக்கிறது.
லகுவான இலக்கு, உடைந்த சன்னல் தத்துவம் ஆகிய கட்டுரைகள், குற்றவாளிகளுக்கு வாய்ப்பை தரக்கூடாது என அறிவுறுத்துகிறது. சிறையில் சம்பவிக்கும் மரணங்களின் பின்னணி, சாலை விதிகளை மீறுவதால் ஏற்படும் பேரிழப்பு பற்றியும் விளக்குகிறது.
கண்ணியமிக்க காவல் துறையில் கறுப்பாடுகள் பற்றியும் எச்சரிக்கிறது. அரசு ஊழியர் போராட்டங்கள், சாலை மறியல், திறமையற்ற, அலட்சியமான அதிகாரிகள், பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களால் நீதிமன்றத்தில் குவியும் வழக்குகள் பற்றி எல்லாம் விரிவாக சுட்டப்பட்டுள்ள நுால்.
–
புலவர் சு.மதியழகன்