இருபத்திரண்டு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு நுால். ஒவ்வொரு கதையையும் படித்து முடித்ததும், குடும்பச் சிக்கல்களுக்கு தீர்வு தோன்றுவதை உணர முடிகிறது. ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளுக்கு சின்ன சைக்கிள் வாங்கிக் கொடுப்பதை, இயலாமை காரணமாக தள்ளிப் போடும் அப்பா.
தொடர்ந்து பள்ளிக்கூடத்தில் முதல் மதிப்பெண் பெற்று, 10ம் வகுப்பில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்றபோது அதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தாலும், இப்போதாவது சைக்கிள் வாங்கிக் கொடுக்க வேண்டுமே என்று கடன் வாங்கத் தயாராகிறார்.
பள்ளியில் குழந்தைகளுக்கு பணப் பரிசு கொடுத்தபோது அதில் சைக்கிள் வாங்கிக் கொடுக்கலாம் என எண்ணிய தந்தையிடம், ‘நீங்கள் ஒரு மொபெட் வாங்கிக் கொள்ளுங்கள்...’ என்று சொல்லும் குழந்தைகள் என, நல்ல பாத்திரங்களாக படைக்கப்பட்டுள்ளன. எல்லா கதைகளும் ஏதோ ஒன்றை அறிவுறுத்துவதாக அமைந்துள்ளன. குடும்ப விழிப்புணர்வு கதை நுால்.
–
முகிலை ராசபாண்டியன்