ஒருவனுக்கு ஒருத்தி என்ற பெயரைப் பார்த்ததும் ஒரு நாவலின் தலைப்பு போல் இருக்கிறதல்லவா. உண்மையில் இது ஒரு பொருளாதார நுால். பொருளாதாரத்திற்கும் ஒருவனுக்கு ஒருத்திக்கும் என்ன தொடர்பு, நாட்டின் பொருளாதாரத்தில் குடும்பத்தின் பங்கு என்ன, பொருளாதாரத்தை பல தார மணம் எப்படி சீரழிக்கிறது, பொருளாதாரத்தை ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒரு தார மணம்
எப்படி சீராக்குகிறது என்பதை தெளிவாக, அதே சமயம் மிகவும் துணிச்சலாக விவரிக்கிறார் எம்.ஆர்.வெங்கடேஷ். முதலாளித்துவம், கம்யூனிசம் என்ற இரண்டு எதிரெதிர் துருவங்களைக் கொண்ட கொள்கைகளுமே ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒருதார மண நடைமுறையை சிதைத்தன. குடும்பம் என்ற அமைப்பிற்கு ஆதாரமான ஒருதார மணம் சிதைக்கப்பட்டதால், அது நாட்டின் பொருளாதாரத்திலும் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை இந்த புத்தகம் விளக்குகிறது.
பலதார மணம் வன்முறைக்கும் தனி மனிதனின் சுயநலத்திற்கும் வழிவகுத்து, அது நாட்டின் பொருளாதாரத்தையே சீரழிக்கிறது என்பதும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. கடமையை செய்யாமல், அரசாங்க நலத் திட்டங்களின் வழியே பலனை மட்டுமே அனுபவிக்கும் இந்திய குடிமகன், தன்னுடைய சொந்த கடமை என்று வரும்போது அவனுடைய நடத்தையும் செயல்பாடுகளும் எப்படி மாறுபடுகிறது என்பதையும் புத்தகம் பேசுகிறது.
சிந்தனையை துாண்டும் பல சிறப்புகள் நிறைந்த புத்தகம் இது. பொருளாதாரம் பற்றிய புத்தகம் என்றாலும் தத்துவார்த்தமாக இருக்கிறது. நாட்டின் உண்மையான வளர்ச்சிக்கு மிகச் சிறந்ததாக கருதப்படும் இந்திய குடும்ப அமைப்புகளே காரணமாக அமைந்தன.
தனி மனிதனின் பங்களிப்பு பொருளாதார வளர்ச்சிக்கு எந்த அளவு உதவியது என்பதையும் அலசுகிறது. உலகம் முழுதும் குடும்பத்தை அடிப்படையாக கொண்டு தான் பொருளாதார கொள்கைகள் அமைய வேண்டும், அது தான் உண்மையான வளர்ச்சிக்கு வகை செய்யும் என்பதை சுவாரசியமாக விளக்குகிறது.
–
இளங்கோவன்