தமிழ் எழுத்து சீர்திருத்தம், கணித்தமிழ் வளர்ச்சி, நாணயவியல் ஆய்வு, பத்திரிகை ஆசிரியர் பணி என்ற தளங்களில் புரிந்துள்ள அறிஞர் இரா.கிருஷ்ணமூர்த்தி சாதனைகளை கூறும் வாழ்க்கை வரலாற்று நுால்.
இவரது கல்விப் பயணம் சூறாவளியானது. எல்லா நிலைகளிலும் முதன்மை நிலையில் தேர்ச்சி பெற்றுள்ளார். உண்மையான கல்வியைக் காடு மேடுகளிலும், மலைகளிலும் தான் கற்றிருக்கிறார். உயிரியலில் துவங்கிய கல்லுாரிக் கல்வி, புவியியல் பாடத்தில் நிலைகொண்டிருக்கிறது.
தமிழ் இலக்கியத்தில் சங்ககால வரையறையை 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பர் அறிஞர்கள். இந்த பழமை குறைந்தபட்ச எல்லை தான்; அதிகபட்ச எல்லை கி.மு., 5ம் நுாற்றாண்டுக்கும் முற்பட்டது என்று நாணயவியல் ஆய்வுகள் வாயிலாக நிறுவியுள்ளார் இரா.கிருஷ்ணமூர்த்தி. சங்ககால நாணயவியல் ஆய்வில் மேன்மை கொண்டதால் தான் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், இந்திய அரசின் உயரிய தொல்காப்பியர் விருதை ஜனாதிபதியின் திருக்கரத்தால் இவருக்கு வழங்கி கவுரவித்துள்ளது.
அன்பு, உண்மை, உழைப்பு, அடக்கம், அறிவுத்தேடல், மன்னிக்கும் மனப்பான்மை, எளிய அணுகுமுறை என உயர்ந்த பண்புகளின் இருப்பிடமாக அவர் திகழ்வதை, அறிஞர்களின் அனுபவ மொழிகள் உணர்த்துகின்றன. பாடங்களை கற்றுத் தரும் அனுபவ செறிவுமிக்க நுால்.
– முகிலை ராசபாண்டியன்