‘ஆங்கிலேயர்கள் வந்த பிறகு தான் இந்தியாவில் கல்வி வளர்ச்சி பெற்றது; பொருளாதாரம் சீரானது; அறிவியல் அறிவு கிடைத்தது’ என்றெல்லாம் சிலர் பேசிக் கொண்டிருக்கின்றனர். அது எந்தளவு மறைக்கப்பட்ட உண்மை என்பதை தெளிவாக விளக்கும் நுால்.
அடிப்படைக் கல்வி அடித்தட்டு மக்களுக்குக் கிடைக்கக்கூடாது; உயர் கல்வி மேல்தட்டு மக்களுக்குக் கிடைக்கக்கூடாது என்பது தான் பிரிட்டிஷாரின் நோக்கமாக இருந்தது.
ஆங்கிலேயர் வரும் முன் கல்வி கற்றவர்களில் பிராமணர் 25 சதவீதமாகவும், மற்றவர் 75 சதவீதமாகவும் இருந்திருக்கின்றனர். இந்த நிலையை புட்டு புட்டு வைத்திருக்கிறார். சமூகத்தின் அனைத்து பிரிவில் இருந்தும், 30 வகை ஜாதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் இருந்துள்ளனர். இப்படி இருந்த காலகட்டத்தில், பிரிட்டனில் 18ம் நுாற்றாண்டு வரை கல்வி மேட்டுக் குடியினருக்கு மட்டுமானதாகவே இருந்தது.
பண்டைய இந்தியா சிறந்து விளங்கிய இன்னொரு துறை வான சாஸ்திரம். சூரிய சந்திரனின் நகர்வுகள், கிரகணங்களை துல்லியமாகக் கணிப்பதில் ஆரம்பித்து, நவீன கருவிகள் இன்றியே கிரகங்களுக்கான துணைக்கோள்களைச் சுட்டிக் காட்டியிருப்பது இந்திய வான சாஸ்திர அறிவு. அந்தத் துறை சார்ந்தவர்களிடையே பெருமதிப்பைப் பெற்றிருக்கிறது.
பிரிட்டிஷார் வருவதற்கு முன் இவையெல்லாம் இருந்திருக்கின்றன என்று சொல்வதன் முக்கிய நோக்கம் என்னவென்றால், இந்தியா ஒரு உயிர்த்துடிப்பான சமூகமாக பல்வேறு அறிவுத்துறைகளில் சுய சிந்தனையுடன் செயல்பட்டு வந்திருக்கிறது என்ற உண்மையைப் புரிய வைக்க வேண்டும் என்பது தான்.
ஒன்று முதல் 10 எண்கள் கொண்ட தசம வகைப்பாடு முதலில் இந்தியாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கணிதத் துறையில் செய்திருக்கும் சாதனை உலக முக்கியத்துவம் வாய்ந்தவை. தன்னிறைவு பெற்றிருந்த இந்திய விவசாயத்துறை, பிரிட்டிஷார் வந்தபின் தான் பெரும் சரிவைச் சந்தித்தது.
‘இங்கிலீஸ்காரன் ஆவியில் நீராவி இஞ்ஜின் கண்டுபிடித்தான்; இந்தியர்களோ இட்லி வேக வைத்தனர்’ என இளக்காரமாக திரிபவர்களுக்கு ஒரு சாட்டையடி தரும் நுால்.
–
இளங்கோவன்