தமிழக முதல்வராக இருந்த பக்தவத்சலம் வாழ்க்கை நிகழ்வுகளை தெளிவாக உரைக்கும் நுால். இளமைப் பருவம், அரசியல் வாழ்க்கை, அரசு பொறுப்பு, நிறைவேற்றிய திட்டங்களை துல்லியமாக எடுத்துரைக்கிறது.
‘எங்கும் பொங்கிய இன்பம்’ என்று துவங்கி, ‘பக்தவத்சலம் வாழ்கவே’ என்பது வரை, 10 தலைப்புகளில் நிகழ்வுகள் தொகுக்கப்பட்டுள்ளன. இளமைப் பருவ நிகழ்வுகள் மிகவும் துல்லியமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
அரசியல் வாழ்வு, உரிய ஆதாரங்களுடன், அப்போதைய காங்கிரஸ் தலைவர்களின் கருத்துரைகளுடன் தரப்பட்டுள்ளது. தேர்தல் போட்டி, வெற்றி, தோல்விகள், ராஜாஜி அமைச்சரவையில் பங்கேற்று, முதல்வராக பொறுப்பேற்பு என விபரங்கள், நாட்குறிப்பு போல் சுவை குன்றாமல் தரப்பட்டுள்ளன.
இவற்றின் ஊடே அந்த காலத்தில் நிலவிய அரசியல் காய் நகர்த்தல்கள், சமூக செயல்பாடு, அந்த காலத்தில் இருந்த எண்ணப்போக்குகளை அறிந்து கொள்ள முடியும். தமிழக வளர்ச்சிக்காக பாடுபட்ட தலைவரை பற்றிய தெளிவான நுால்.
– மதி