வரதா வரம்தா என கேட்கும் இந்த புத்தகம் கேட்காமலேயே வரம் தரும் அத்தி வரதனாம் வரதராஜன் பற்றிய தொகுப்பு. ஆசிரியர் இந்திரா சவுந்தர்ராஜனின் தெளிந்த எளிமையான, இனிமையான நடைக்கு மற்றுமொரு ரத்தினக்கல் பதித்துள்ளது இந்நுால்.
காஞ்சியின் வரதனை ராமானுஜரும், வேதாந்த தேசிகனும் போற்றி பாடியதைத் தாண்டி மிலேச்சர்கள் காலத்தில் காஞ்சிக்கு ஏற்பட்ட நிலை, திருச்சி ஸ்ரீரங்கத்திற்கு ஏற்பட்ட நிலை, ஹிந்துக்களின் வழிபாடு கேள்விக்குறியானது குறித்து முழுமையாக விளக்கியுள்ளார்.
ஸ்ரீரங்கத்தில் இருந்து மதுரை வந்து திருமலை வரை வரிசையாக அழகிய மணவாளப் பெருமாள் புறப்பாடாகி, 60 ஆண்டுக்குப்பின், மீண்டும் ஸ்ரீரங்கம் வந்த கதை படிக்க படிக்க மனதை நெகிழச் செய்கிறது. வரம் தரும் வரதராஜன் அத்தி வரதனான கதை, அனந்தசரஸ் குளத்தின் ஜென்மாந்திர பெருமைகள் என பக்தியின் பெருமை கூறுகிறது இந்நுால்.
மாசுபடாத கிணற்று நீரைப் போல நம் முன்னோர்களின் மாசுபடாத பக்தியை அந்தக் கால நடைமுறைகளை விளக்கியுள்ள ஆசிரியரின் எழுத்துக்கு வரதன் நிச்சயம் வரம் தருவான். படிக்கும் வாசகர்களுக்கு பக்தியும், முக்தியும் நிச்சயம்.
–
எம்.எம்.ஜெ.,