மரணத்திற்கு பின் என்ன நடக்கும் என்பது கற்காலம் தொட்டு, நவீனத்தின் கம்ப்யூட்டர் காலம் வரை புரியாத புதிராகவே உள்ளது. அதற்கான பதிலை ஆன்மிகம் வழியான தேடுதலாக அமைந்துள்ள புத்தகம்.
எழுத்து நடை ஒரே மூச்சில் படிக்கும் ஆர்வத்தை துாண்டுகிறது. சரித்திரம், கதைகள், வாழ்வியல், தத்துவம் என புத்தக பிரியர்களுக்கு, ‘ஒரு முடிவின் ஆரம்பம், உள்ளொளி பயணம், சொர்க்கமும், நரகமும்’ துவங்கி ‘என் கதை முடியும் நேரம்’ வரை ஒன்பது தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள அத்தனை விஷயங்களும் வித்தியாசமானவை.
அடுத்து என்ன நடக்குமோ என்ற தகவல்களுடன் ஆசிரியரின் இஷ்ட தெய்வமான ‘பச்சை புடவைக்காரி’ மீனாட்சியுடன் பேசிக்கொண்டே பயணிக்க வைத்திருப்பதை படிக்கும் போது, மரணத்தை அனுபவித்து பயணிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது என்பதில் ஐயமில்லை. நிறைவாக, மரணத்தை விட வலியது அன்பு தான் என்பதையும் நுாலாசிரியர் உணர்த்தியுள்ளார்.
–
வியாஸ்