பகவான் ரமணரை நாடி வந்த பக்தர்களையும், அவர்களது அனுபவங்களையும் விவரிப்பதுடன், பகவானின் வாழ்க்கையையும் உபதேசத்தையும் விளக்கியுரைக்கும் நுால். ஆத்மா இருப்பது எங்கே, கடவுளைக் காண முடியுமா, மனதை அடக்குவது எப்படி, முன் ஜென்மம் நிஜமா, பிறப்பும் இறப்பும் ஏன், இறந்தவர்கள் யார், எது துறவு என்ற கேள்விகளுக்கு, பகவான் ரமணர் அளித்த சுவாரசிய பதில்கள் இடம் பெற்றுள்ளன.
உண்மையில் ரமணர் வேறு, அவரது உபதேசங்கள் வேறல்ல; இரண்டுமே ஒன்று தான்! அவர் எப்படி வாழ்ந்தாரோ அதையே உபதேசித்தார். எதை உபதேசித்தாரோ அதன்படியே வாழ்ந்தார். அவரது வாழ்க்கையே உபதேசம் தான். அவை மிக எளிய மொழியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கணபதி முனிவருக்கும், வள்ளிமலை சுவாமிகளுக்கும் முருகன் கோலத்தில் காட்சி அளித்த அதிசயம் முதல், உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்களுக்கு நிகழ்ந்த அனுபவங்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன. பகவான் வாழ்க்கை நிகழ்வுகளை ஆன்மப் பரவசத்திற்கு உள்ளாகும் வகையில் தந்திருக்கிறார். ஆன்மத் தேடல் உள்ளவர்களுக்கு இந்நுால் பொக்கிஷம்.
–
இளங்கோவன்