விசுவ ஹிந்து பரிஷத் அகில உலக செயல் தலைவராக சேவை ஆற்றிய வேதாந்தம்ஜியின் சுயசரிதையாக வந்துள்ள நுால். தேச சேவையில் ஈடுபட்ட பேரனுபவம் விரிவாக, சுவையாக பதிவாகி உள்ளது.
ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் இணைந்தது குறித்து பெருமிதம் கலந்த உணர்வுடன் எழுதப்பட்டு உள்ளது. சிறுவயதில், சுற்றுலா செல்வதாக பெற்றோரிடம் கூறி குருஜி கோல்வால்கரை ஆலப்புழையில் சந்தித்த அனுபவம் சிலிர்ப்பு தருகிறது.
அந்த உண்மையை மறைத்ததற்காக, தந்தையிடம் பெற்ற தண்டனையை எழுதியுள்ள விதம் சுவாரசியம் தருகிறது. இது, அவரது வாழ்வின் பொன்னான தருணத்தை நினைவூட்டுகிறது. ராமேஸ்வரம் கோசாமி மடம், பட்டுக்கோட்டை நாடியம் கிராமத்தில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் தெளிவாக விவரிக்கிறது.
புத்தகத்தில், ‘மகான்களை சந்தித்தேன்’ என்ற பகுதி பரவசமூட்டுகிறது. சித்தப்பாவுடன் 16 வயதில் சென்று, தேப்பெருமாநல்லுாரில் காஞ்சி பெரியவரை சந்தித்தது பற்றி குறிப்பிட்டுள்ளார். பரமாச்சாரியார் திருவாக்கின்படி தேச சேவையில் ஈடுபட்டது பற்றிய விபரத்தை மிகவும் கவித்துவமாக பதிவு செய்துள்ளார்.
ஹிந்துஸ்தானம் ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட அமைப்புக்கு, ‘விசுவ ஹிந்து பரிஷத்’ என பெயர் சூட்டிய வரலாற்று தகவலை விளக்கமாக குறிப்பிட்டு உள்ளார். பெரும் கல்வி சாம்ராஜ்ஜியத்தை நிர்வகித்த அனுபவம் படிப்பினை ஊட்டும் வகையில் உள்ளது. ராம ஜென்ம பூமி கள அனுபவ செயல்பாடு சிறப்பாக பதிவாகியுள்ளது.
இவை எல்லாம் பாடம் கற்றுத்தரும் வகையில் உள்ளன. தென்னாங்கூர் ஹரிதாஸ் சுவாமிகள், அகில பாரத துறவியர் மாநாட்டில் மகான்களை சந்தித்தது உட்பட முக்கிய நிகழ்வுகளை, பசுமை நினைவுடன் பதிவு செய்துள்ளார். கையறு நிலை என்ற தலைப்பிலும் ஒரு பகுதியை வருத்தத்துடன் எழுதியுள்ளார்.
நலிவுற்ற மக்கள் இறைவனை வழிபட அர்ப்பணிப்புடன் செயல்பட்டது, கிராம கோவில் பூஜாரிகள் பேரவைக்கு பெற்று தந்த சலுகை விபரங்கள் குறித்த தகவல்களும் உள்ளன. மதம் மாறிய ஹிந்துக்களை மீண்டும் தாய் மதத்தில் சேர்க்க எடுத்த செயல்பாடுகளும், பெரும் முயற்சிகளும் பதிவாகியுள்ளன. ஹிந்து மக்களுக்கு ஆற்றிய சேவையின் நீண்ட தடத்தை வெளிச்சமிட்டு காட்டும் நுால்.
–
சாமி தியாகராசன்