இதிகாசம், புராணம் போன்றவற்றை மொழி மாற்றம் செய்யும்போது, மூலக் கருத்திலிருந்து முரண்பட்டு விடாமல், அதை மேலும் மகிமைப்படுத்தும் கற்பனை கலந்து எழுதுவது வழக்கமானதே. அதேபோல ராமாயணத்தின் விளக்க உரை போல ஓரளவு கற்பனை கலந்து, மூலக்கரு மாறாமல் சுவைபட எழுதப்பட்டுள்ள நுால். உதாரணமாக, குழந்தையாக இருந்தபோதே ராமன், லட்சுமணன் பிணைப்பை சுமித்திரை வெளிப்படுத்திய விதம் ஆசிரியரின் கற்பனையின் உச்ச கட்டம்.
‘சிவதனுசே, எனக்காக இந்த முறை மனம் இறங்க வேண்டும். ஆமாம், என் கண்ணில் கலந்தவர் உன்னைத் தொட்டுத் துாக்கும்போது, தயவு செய்து நெளிந்து, குழைந்துவிடு. அவர் உன்னில் நாணேற்றும்போது பணிவுடன் ஏற்றுக் கொள். உனக்குப் புரிகிறதா, என் ஏக்கம். உன்னைக் கரம் பற்றும் அவர், என்னையும் கரம் பற்ற வேண்டும்; அதற்கு உதவுவாயா, எங்களை சேர்த்து வைப்பாயா சிவதனுசே...’ என்கிறது சீதையின் காதல் வேண்டுகோள்.
‘சின்னஞ்சிறு பாலகனான அவனை உயரே துாக்கிப் பிடித்துக் கொஞ்சிய நாட்களில், எங்கே தன் பாதங்கள் என் முகத்தில் பட்டுவிடுமோ என்று அஞ்சி கால்களை மடக்கி வைத்துக் கொண்ட, மரியாதை செலுத்தத் தெரிந்த உத்தம புத்திரனாயிற்றே அவன்!’ என தசரதனின் மனப்போக்கு சொல்லப்பட்டுள்ளது.
‘அரசவை ஜோதிடர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்க நேர்ந்தது. இந்த உரையாடல் தான் என் கொடிய நாடகத்தை நடத்த முழு காரணமாக அமைந்தது. ராமன் காப்பாற்றப்பட வேண்டுமானால், பரதனை தியாகம் செய்யவும் தயாராக இருந்தேன்’ என்ற கைகேயியின் வித்தியாசமான வாக்குமூலம் பதிவாகியுள்ளது.
காஞ்சி மஹா சுவாமிகள், ‘புராணங்களில் கற்பனையும் இடைச்செருகலும் இருக்கலாம் தான். ஆனால் எது கற்பனை, எது இடைசெருகல், எது மூலம் என்று யார் நிர்ணயிப்பது... அவற்றை நீக்கிவிடுவது என்று ஆரம்பித்தால் மூலக்கதை என்ற ஒன்றே நிற்காது. அதனால், இன்றைக்கு நம் கைக்கு எந்த ரூபத்தில் புராணங்கள் வந்திருக்கின்றனவோ அவற்றை அப்படியே வைத்து ரட்சிக்கத்தான் வேண்டும்’ என்று குறிப்பிட்டிருப்பதை மனதில் கொண்டு இந்த புத்தகத்தை ரசித்து படிக்கலாம்.
– இளங்கோவன்