புகழ்மிக்க குழந்தைப் பாடல் ஆசிரியர் அழ.வள்ளியப்பா எழுதிய 117 பாடல்கள் அடங்கிய தொகுதி நுால். காலம் கடந்தும் உயிர்ப்புடன் உள்ள பாடல்கள். முதல் பாட்டில் தொந்தி கணபதியை வேண்டுகிறது குழந்தை. சொத்து சுகம் கேட்கவில்லை; நல்லவன் என்ற பெயர் கேட்கிறது. குழந்தைகள் கட்டும் வீட்டிற்கு காசு, பணம் பற்றி கவலை இல்லை; மணல் போதும்.
உலகத்திலேயே, பெரியதாக உள்ள மரத்தில் அடையாறு ஆலமரமும் ஒன்றாம். அறிந்து கொள்ள வேண்டிய செய்தியை பாடலில் தருகிறார். உமியை வைத்து அரிசியை வைத்து விளைச்சல் பெற முடியாது. விதை நெல் வேண்டும் என்று ஒரு பாடல் விளங்க வைக்கிறது. அழியும் செல்வத்தைக் கொடுத்து, அழியாத செல்வமான புத்தகங்கள் கொண்டு வந்ததை பாட்டில் காட்டும் நுால்.
–
சீத்தலைச் சாத்தன்