மரணத்தையே மாற்றி அமைக்கும் மகத்தான ஆற்றல் மிக்கவராய் விளங்கிய சித்தர்கள் பற்றிய நுால். திருத்துறையூரில் இருந்து மூன்று வண்டிகளில் அரிசி, உணவுப் பொருட்கள் வள்ளலாரின் சித்தி வளாக மாளிகைக்கு வந்தது குறித்த அற்புத ஆற்றலை வியப்புடன் விளக்குகிறது.
குருபரம் சிவேந்திரர், ‘தங்களை தரிசனம் செய்ய வேண்டும்’ என்று சொன்னதும் பதை பதைத்தார் மைசூரு அரண்மனையில் இருந்த சதாசிவர். உடனே சமஸ்தானப் பதவியைத் துறந்து குருவைத் தேடி ஓடி வந்தவரிடம், ‘ஊரார் வாயை அடக்கக் கற்ற நீ உன் வாயை அடக்கக் கற்கவில்லையே. முதலில் உன் வாயை அடக்கு’ என சற்றே கோபத்துடன் கூறினார். அந்தக் கணம் குருவின் பாதத்தில் வீழ்ந்து வணங்கி, மவுன யோகியாய் மாறினார்.
இப்படி 12 சித்தர்களின் வாழ்க்கை வரலாறு, பட்ட துன்பங்கள் செய்த தியாகங்கள் எளிய நடையில் விளக்கப்பட்டுள்ளன. சித்தர்களை சமுதாயம் முதலில் என்ன பாடுபடுத்தியது, ஏற்றுக் கொண்ட பின் எப்படி கொண்டாடியது என்பதை புரிய வைக்கிறது. மகானாக மாறி சித்தராய் மறைவது சிலருக்கு மட்டுமே கிடைத்த வரம். அப்படி வரம் பெற்றவர்களை தொகுத்து வரமாய் தந்துள்ளார் ஆசிரியர்.
–
எம்.எம்.ஜெ.,