மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., குறித்து எழுதப்பட்டுள்ள நுால். அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோவை, தொழில் நுட்ப ரீதியாகப் பயன்படுத்தி மீண்டும் முதல்வரானதை விறுவிறுப்பாக விளக்கப்பட்டுள்ளது.
திருமண விழாவில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசை கச்சேரி முடியும் வரை டின்னருக்கு தடை போட்ட இசைநேசன். எம்.ஜி.ஆரைத் தவிர வேறு யாரையும் ஹீரோவாக போடமாட்டேன் என்று சின்னப்ப தேவர் சொல்லக் காரணம் என்ன...?
‘பொன் அந்தி மாலைப் பொழுது... பொங்கட்டும் இன்ப உறவு’ என்ற பாட்டுக்காக மூன்று டியூன்களை ஒன்றாக்கி இசையமைப்பாளர்கள் சங்கர் கணேசை அசர வைத்த சாமர்த்தியம்... என பிரமிக்க வைத்த ஆளுமைகள் எம்.ஜி.ஆர்., என்கிற பொக்கிஷத்துடன் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட விதம் படிக்கத் திகட்டாமல் பரவசம் ஊட்டுகிறது.
அனுபவங்களின் கோர்வையாக எழுதியது இன்னும் சிறப்பு. எம்.ஜி.ஆர்., என்ற மாமனிதரின் வரலாற்றை, விறுவிறுப்பு குறையாமல் படிக்க முடிகிறது.
– எம்.எம்.ஜெ.,