மனித குணங்கள், நாட்டு நடப்புகளை நகைச்சுவையாக மனதில் பதிய வைக்கும் நுால். உடல் வலிமை, அன்பு இதில் எதைக்கொண்டு மனித மனதில் இடம் பிடிக்க முடியும் என, ‘சாவியும், சுத்தியலும்’ கதை பேசுகிறது.
சொல்லின் வலிமை தெரிந்து பேச வேண்டும் என்பதை, ‘தலையில் ஓங்கி அடி’ கதை உணர்த்துகிறது. ஒரு தவறுக்கான தண்டனை, தொடர்ந்து அதை செய்ய வைக்கும் என்பதை, ‘ஒரு தவறுக்கு ஒரு ரூபாய் அபராதம்’ என்ற கதை நகைச்சுவையாக சொல்கிறது.
நாயின் பொறுப்புணர்வை சுட்டிக்காட்டி, வீட்டுக்காரரின் அறியாமையை பேசும், ‘நாயும், கடைக்காரரும்’ கதை ரசிக்க வைக்கிறது. ரயில் இருக்கையை மாற்றிக் கேட்க, காலி இருக்கையில் யாருமில்லையே! என, பயணி பேசுவது சிரிப்பை வரவழைக்கிறது. எந்த விரலுக்கு வலிமை அதிகம் என, லட்டு கொடுத்து இனிப்பாக்குகிறது. கடமை தவறும் போலீசாரின் அறியாமையால் தப்பிக்கும் திருடனின் செயல் ரசிக்க வைக்கிறது. சிந்தனையை துாண்டும் கதைகளின் தொகுப்பு நுால்.
– டி.எஸ்.ராயன்