அவ்வையார் பேசிய அரசியலும், இலக்கியமும் ஏனோ நம் நினைவுக்கு வரத் தாமதமாகிறது. அதைத் தொடர்ந்தும் நிறைய பெண்கள் பேசினர்; எழுதினர். சமூக மாற்றத்தில் செயல்பட்டனர். ஆனால், அவர்களை அடியோடு மறந்து போனோம். அவற்றை நினைவூட்டுகிறது, பெண்ணே பேராற்றல் என்ற நுாலின் இரண்டாம் பாகம்.
திரையில், அவ்வைக் கிழவியையும், கவுந்தியடிகளையும் நடக்கவிட்ட கே.பி.சுந்தராம்பாள்; திருப்பதி திருமலையில் தினமும் கோவில் நடை திறக்கும் போது ஒலிக்கும் சுப்ரபாதத்தைப் பாடிய எம்.எஸ்.சுப்புலட்சுமி; பத்மவிபூஷண் விருது பெற்ற முதல் பெண் நடனக்கலைஞர் பாலசரஸ்வதி பற்றி விரிவாக தருகிறது.
வாழ்க்கை முழுவதையும் இசைக்காகவே அர்ப்பணித்த டி.கே.பட்டம்மாள்; சபரிமலையில் புதிய அய்யப்பன் சிலை பிரதிஷ்டை செய்யும் முன் தமிழகம் முழுதும் எடுத்துச் செல்லப்பட்டபோது உடன் நாதஸ்வரம் வாசித்துச் செல்லும் பேறு பெற்ற பொன்னுத்தாய் பற்றிய குறிப்புகள் உள்ளன.
விடுதலைத் தளத்திலும், இலக்கியத் தளத்திலும், பேச்சாளர், எழுத்தாளர் எனச் சம பங்காற்றிய அசலாம்பிகை அம்மையார்; தமிழில் முதல் பெண் நாவலாசிரியை வை.மு.கோதை நாயகி; தமிழகத்தின் முதல் கிறிஸ்துவபெண் அமைச்சர் லுார்தம்மாள் சைமன் பற்றிய விபரங்கள் தரப்பட்டுள்ளன.
நாட்டின் முதல் பெண் மேயர் என்ற பெருமை பெற்ற தாரா செரியன்; இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அன்னா ராஜம் ஜார்ஜ்; கமல்ஹாசனுக்கு, ஹாசன் என்ற பெயர் வந்த விதம்; அனைத்து ஜாதியினருக்கும் என இந்தியாவிலேயே முதல் பள்ளியை உருவாக்கிய சாவித்திரிபாய் பற்றிய செய்திகள் உள்ளன.
முஸ்லிம் சிறுமியர் கல்விக்காக இயக்கம் நடத்திய ருகியா சகாவத் ஹுசைன்; இந்தியாவின் தலைசிறந்த பெண் தொல்லியல் நிபுணர் மீனாட்சி; பதநீரில் இருக்கும் ஊட்டச்சத்து தொடர்பான முன்னோடி ஆராய்ச்சியாளர் கமலா சோஹோனி; இந்திய விடுதலை போரில் பங்கேற்று சிறை சென்ற அன்னிபெசன்ட் உட்பட, 60க்கும் மேற்பட்ட பெண் ஆளுமைகளை அறிந்து கொள்ள உதவும் நுால்.
–
இளங்கோவன்