நடுத்தர வாழ்க்கையை மையப்படுத்திய சிறுகதைகளின் தொகுப்பு நுால். குடும்பங்களில் நிலவும் போதாமை, எதிர்பார்ப்பு கருவாகிஉள்ளன. தலைப்பாக வரும், ‘திரட்டுப் பால்’ கதையில், புகுந்த வீட்டிலிருந்து வந்த மகள் மற்றும் பேரனுக்கு திரட்டுப் பால் காய்ச்சுகிறார் மூதாட்டி. அவரது சிரமம் நிறைந்த வாழ்க்கை சூழல் பற்றி மிக அழகாக சித்தரித்து, உறவு நெகிழ்ச்சியை பண்புடன் முடிக்கிறது.
பத்திரிகையாளர் பற்றிய, ‘எழுத்துக்கூலி’ கதை, இயல்பு வாழ்க்கையில் அரசியல்வாதிகள் நடந்து கொள்ளும் விதம் குறித்து மிக இயல்பாக சித்தரிக்கிறது. ‘சிரிப்பு’ என்ற கதையில் வீட்டை விற்கும் முதியவரும், அவரது மகளும் எப்படியெல்லாம் அங்கு வாழ்ந்தனர் என்பதை அசை போடுவது அழகாக எடுத்து கூறப்பட்டுள்ளது. கால மாற்றத்தால் சாலை உயரம் அதிகமாகி, வீடு பள்ளமானதை குறித்த இயல்பும் மனதில் பதியும்படி அழுத்தமாக சொல்லப்பட்டுள்ளது. நடுத்தர மக்கள் வாழ்வை எளிய நடையில் பிரதிபலிக்கும் சிறுகதை தொகுப்பு நுால்.
–
முகில் குமரன்