தமிழ் புத்தாண்டையொட்டி கலைமகள் இதழ் உருவாக்கி வெளியிட்டுள்ள அற்புத சிறப்பு மலர். பல்சுவையுடன் வண்ண மயமாக தொடுக்கப்பட்டுள்ளது.
தீபாவளி, பொங்கல் பண்டிகை மலர் போல் உள்ளது. காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் கிருபானந்த வாரியாரின் அருளாசி கட்டுரைகள் சிறப்பு சேர்க்கின்றன.
தொடர்ந்து, நாணயவியல் அறிஞரும், ‘தினமலர்’ நாளிதழ் முன்னாள் ஆசிரியருமான அமரர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி எழுதிய, ‘மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள்’ என்ற கட்டுரை அலங்கரிக்கிறது.
இதன் அறிமுக உரையில், ‘தந்தை போல் பரிவு கொண்டவர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி. இந்திய நாணயவியல் ஆய்வில் முக்கிய பங்கு வகித்தவர். அவரை, ‘இந்திய நாணயவியல் தந்தை’ என்று அழைக்கலாம்...’ என, உணர்வு பெருக்குடன் குறிப்பிட்டுள்ளார், சிறப்பு மலரை உருவாக்கிய கீழாம்பூர்.
மு.வரதராசனாரின், ‘சங்கப்பாக்களும், திருக்குறளும்’ மற்றும் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் எழுதிய, ‘தமிழின் தொன்மையும், ஆராய்ச்சி உண்மையும்’ போன்ற படைப்புகள் மறு பிரசுரம் செய்யப்பட்டுள்ளன.
சாதனை படைக்கும் பெண் தணிக்கையாளர்கள் பற்றிய படங்களுடன் சுவாரசியமான தகவல் சிறப்பு சேர்க்கிறது. காசியில் நடந்த தமிழ் சங்கமம், பாரதியார் குறித்த தகவல்கள் எல்லாம் பாதுகாக்கத்தக்கன.
சுதேசமித்ரன் பத்திரிகையில் ஒரே நேரத்தில் பணியாற்றிய மூன்று சுப்ரமணியன்கள் குறித்த பேட்டி அமோகமாக உள்ளது.
ஆன்மிகம், வரலாறு, தமிழ் வளர்ச்சி, கைத்தொழில், நிர்வாகவியல் என விரும்பும் அம்சங்களுடன் இனிமையாக சித்திரையில் மலர்ந்துள்ளது தமிழ் புத்தாண்டு சிறப்பு மலர். படித்து பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்.
– மலர்