கேரளா கடவுளின் தேசம் என்ற வாசகம். கேரளாவில் உள்ள கோவில்களை காணும் போது, உண்மையில் கடவுளின் தேசம்தான் என சொல்ல வைத்து விடுகிறது.
ராமாயணம், மஹாபாரதக் கதைகளுடன் தொடர்புடைய கோவில்கள், சிலப்பதிகாரத்துடன் தொடர்புடைய கோவில்கள், வித்தியாசமான அமைப்புகளையும், வழிபாடுகளையும் கொண்டர50 கேரளக் கோவில்கள் குறித்த சுவாரசியமான அறியாத தகவல்களை சுவைபட இந்த நுாலில் விவரிக்கப்பட்டுள்ளது.
சில வித்தியாசமான கோவில்கள்: கொட்டாரக்கரா விநாயகருக்கு நெய்யப்பம் தான் மிகவும் பிடிக்கும். சபரிமலை ஐயப்பனைப் புனிதப் பயணம் மேற்கொண்டு வழிபடும் பக்தர்களுக்கு மறுபிறவி இல்லாத பேரின்ப நிலை கிடைக்கும்.
பொருவழி எனும் இடத்தில் துரியோதனனுக்கு தனிக்கோவில் உள்ளது. பெண்களை பகல் நேர வழிபாட்டுக்கு அனுமதிக்காமல் இரவு நேரம் அனுமதிக்கும் தளிப்பிரம்பா ராஜராஜேஸ்வரர் கோவில்.
ஓணம் திருவிழா முதன் முதலாகத் தொடங்கிய திருக்காட்கரையப்பன் கோவில். திருமங்கையாழ்வார் மற்றும் நம்மாழ்வாரால் பாடப் பெற்ற வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருநாவாய் முகுந்தன் கோவில்.
தென்பழநி என்று போற்றப்படும் ஹரிப்பாடு சுப்பிரமணியசாமி கோவில். ஆண்டுக்கு 28 நாட்கள் மட்டுமே திறக்கப்படும் கொட்டியூர் மஹாதேவர் கோவில்.
இரிஞ்சாலக்குடாவில் பரதன் கோவில், திருமூழிக்களத்தில் லட்சுமணர் கோவில், பாயம்மலில் சத்ருக்கனன் கோவில், புல்பள்ளியில் சீதாதேவி, லவன், குசன் கோவில் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
ஆண் பக்தர்கள் பெண் வேடமிட்டு கோவிலைச் சுற்றி வலம் வந்து விளக்கேற்றி வழிபடும் கொற்றன்குளக்கரை பகவதி கோவில் என ஆன்மிகத் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.
– இளங்கோவன்