கேரளாவில் ஒவ்வொரு கோவிலும், ஒரு புதிய செய்தியை அல்லது நல்லதொரு வழிகாட்டுதலை தரக்கூடியதாக அமைந்திருக்கின்றன.
புனிதப் பயணம் செல்ல விரும்புபவர்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக, 45 கேரளக் கோவில்கள் குறித்த வித்தியாசமான, அறியாத தகவல்களை சுவைபட விவரிக்கும் நுால்.
சில வித்தியாசமான கோவில்கள்: தருமர் புதுப்பித்து வழிபட்ட திருச்சிற்றாறு என்கிற திருச்செங்குன்றுார் விஷ்ணு கோவில்; பீமன் புதுப்பித்து வழிபட்ட திருப்புலியூர் மகாவிஷ்ணு கோவில்; அர்ச்சுனனுக்குத் தெரிந்தே செய்த தவறுகளால் ஏற்பட்ட பாவங்களை நீக்கி மன அமைதியைத் தந்த திருவாரண்விளை என்கிற ஆரணமுளா பார்த்தசாரதி கோவில்.
ஓணம் திருவிழா முதன் முதலாகத் துவங்கிய திருக்காட்கரை திருக்காட்கரையப்பன் கோவில்; திருமங்கையாழ்வார் மற்றும் நம்மாழ்வாரால் பாடப் பெற்ற வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருநாவாய் முகுந்தன் கோவில் பற்றிய விபரங்கள் உள்ளன.
ஆதிசங்கரர் உருவாக்கிய காலடி கோவில்; காசி விசுவநாதரை வணங்கினால் கிடைக்கின்ற பலன்களில், பாதியை அளிக்கும் கல்பாத்தி விசுவநாதர்; உடல் நலத்திற்கான மருந்தைத் தயாரித்து, அம்மனுக்குப் படைத்து, பிரசாதமாகத் தரும் நெல்லியக்காட்டுமனா பத்ரகாளி கோவில்.
அணையா விளக்கு உள்ள ஏற்றுமானுார் மகாதேவர் கோவில்; அம்மனுக்கும் மாதவிடாய் ஏற்படும் செங்கன்னுார் பகவதியம்மன் கோவில் பற்றிய குறிப்புகள் உள்ளன.
பெண்களின் சபரிமலை பெருநாடு காக்காட்டு கோயிக்கால் தரும சாஸ்தா கோவில்; மனிதத் தோற்றத்தில் கையில் நெற்கதிர் மற்றும் தீப்பந்தத்துடன் முருகப் பெருமான் காட்சி தரும் தாழக்கரை சுப்பிரமணிய சுவாமி கோவில் என, புத்தகம்முழுதும் வித்தியாசமான தகவல்கள் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளன.
– இளங்கோவன்