உளவியல் சம்பந்தமாக, அபிநவம் ராஜகோபாலன் எழுதியுள்ள ஒரு மாதிரி மனிதர்கள் தொகுப்பில், ஆறு கதைகள் இருக்கின்றன. இவை வழக்கமான பாணியில் இருந்து சற்று மாறுபட்டு சுவாரசியம் தருகின்றன.
கணவனின் ஆசையைப் பூர்த்தி செய்வதற்காக தன் மகளையே விதவையாக்கிய தாய்; ஒரு சிலரின் வெறுப்பு மற்றும் அதனால் ஏற்பட்ட பரவலான பழிச் சொல்லுக்கு ஆளாகித் தவித்த ஓவியக் கலைஞன்.
சகோதரியின் வஞ்சகத்தால் மன அழுத்தத்திற்கு ஆளான ஒரு பெண் மற்றும் அந்த வஞ்சகத்தைச் செய்த பிறகு அதற்காக வருந்தி பாவமன்னிப்பு கோரும் சகோதரி; தவறான முதலீட்டால் உறவுகளை இழந்து, ஏமாற்றப்பட்டு சமூகத்தையும் மனிதர்களையும் குடும்பத்தையும் வெறுத்து அதிலிருந்து மீண்ட ஒருவர்; தாழ்வு மனப்பான்மையால் மற்றவர் காதலை நிராகரித்து பின்னர் மனம் மாறி அந்த காதலை ஏற்ற நேரத்தில் மீண்டும் விதி விளையாடியதால் பாதிக்கப்பட்ட ஒரு ஆணும் பெண்ணும்.
தலைமுறை இடைவெளியால், வளரும் தலைமுறைக்கும் வாழ்ந்த தலைமுறைக்கும் ஏற்படும் முரண்பாட்டை விளக்குகிறது. இதனால் பல்வேறு மனக்குழப்பங்களுக்கு உள்ளாகி, பின்னர் தெளிவு பெறும் ஒரு பெரியவர் கதாபாத்திரம் மனதில் நிற்கிறது.
இப்படி பலதரப்பட்ட மக்களின் மன நிலையைப் பிரதிபலிப்பதாக கதை கருக்கள் உள்ளன. தாழ்வு மனப்பான்மை, உடல் ஊனம், அழகு மற்றும் அறிவுத் திறன் பற்றிய சுய மதிப்பீடுகள் காரணமாக வரும் அழுத்தங்கள் பற்றி கூறுகிறது.
தொழில், உத்தியோகம், காதல் இவற்றில் தோல்வி, நிறைவேறாத எதிர்பார்ப்புகள் இவையெல்லாம் கூட இத்தகைய மனச்சிதறல்களுக்கு காரணமாவதை விளக்குகிறது. இதை சில கதைகளின் முக்கிய பாத்திர படைப்புகளில் காண முடிகிறது.
மொத்தத்தில் இது ஒரு புதுமையான, வித்தியாசமான சிறந்த படைப்பு.
– இளங்கோவன்