சென்னையைப் புரட்டி போட்ட கன மழை பற்றித் தான் இப்போது எல்லாரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இப்படி ஒன்று நடக்கப் போகிறது என்பதை அந்துமணி இந்த வருடத்தின் ஆரம்பம் முதலே, வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதத்தில், பல வாரங்களாக சொல்லி வந்திருக்கிறார் என்பதை, இப்புத்தகத்தின் மூலம் அறியும் போது ஆச்சரியம் ஏற்படுகிறது.
‘பருவ மழையை சமாளிக்க, தி.மு.க., அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக உள்ளதா?’ என்று சென்னை வாசகர், மனோகரன் என்பவர் ஒரு கேள்வி கேட்டுள்ளார்.
‘இந்த வருட பருவ மழையின் போது, மழை நீர் தேங்காது என்றே நம்புகிறேன்’ என்று ஸ்டாலின் அவநம்பிக்கையுடன் பேசியதை சுட்டிக்காட்டி, ‘அவருக்கே நம்பிக்கை இல்லை எனும் போது, எனக்கு எப்படி நம்பிக்கை வரும்...’ என்ற தொனியில் பதில் தந்துள்ளார்.
அதேபோல், ஆனந்தன் என்பவர், ‘பருவ மழையை சமாளிக்க அரசு ஏற்பாடு செய்துள்ளதா?’என்று கேட்டுள்ளார். இக்கேள்விக்கு, ‘ஏற்பாடுகள் எல்லாம் பேச்சாகத் தான் இருக்கிறது; மழை வரும் போது தான், செய்த ஏற்பாடுகளின் லட்சணம் தெரியும்...’ என்று பதில் தந்துள்ளார், அந்துமணி. அவரின் கூற்றுப் படியே இப்போது, தி.மு.க., அரசின் ஏற்பாடுகளின் லட்சணம் குறித்து தான் சென்னை மக்கள் விலாவாரியாக பேசிக் கொண்டிருக்கின்றனரே!
அக்டோபர் மாதம் பெய்த ஒரு சாதாரண மழையின் போதே, சென்னை தத்தளித்தது. அதைக் குறிப்பிட்டு ஒரு வாசகர், ‘இப்போதே இப்படி இருக்கிறதே... நவம்பர், டிசம்பர் மாதம் சென்னையின் நிலை எப்படி இருக்கும்?’ என்று கேள்வி கேட்டுள்ளார்.
‘முதல்வர், தன் துாக்கத்தை தொலைக்கும் அளவிற்கு இருக்கும்...!’ என்று பதில் தந்துள்ளார், அந்துமணி. உண்மை தானே... இப்போது மக்களை எப்படி சமாதானப்படுத்துவது என்ற சிந்தனையில் அனேகமாக அவரது துாக்கம் தொலைந்து தானே போயிருக்கும்!
மேல் புவனகிரியில் இருந்து ஜெயம் என்ற வாசகர், ‘பருவ மழையை சமாளிக்க, சிங்கார சென்னை தயாராகிவிட்டதா...?’ என்று கேட்ட கேள்விக்கு, அந்துமணி தந்துள்ள தைரியமான பதில் அவருக்கே உரித்தானது.
‘பருவ மழைக்கு சென்னை தயாராகவில்லை; தயார் செய்ய வேண்டிய காண்ட்ராக்டர்கள், ஆளும் கட்சியினருக்கு கொடுக்க வேண்டியதை கொடுப்பதால், ஆட்சியாளர்கள் வேலைகள் பற்றி கண்டு கொள்வது இல்லை; பள்ளம் தோண்டிக் கொண்டே இருக்கின்றனர். பருவ மழையை சென்னை சமாளிக்க முடியாத நிலையே உள்ளது...!’ என்று உண்மையை நெற்றயில் அடித்தாற் போல் சொல்லியுள்ளார்.
தற்போது பருவ மழை, சென்னையில் ஏற்படுத்தியுள்ள அவலம் குறித்து, முன் கூட்டியே முன் எச்சரிக்கையாக, பல இடங்களில் அந்துமணி குறிப்பிட்டுள்ளார். இனியாவது, அந்துமணியின் வார்த்தைகளில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தினால் நல்லது!
‘பிரச்னைகளை சமாளிக்க, வாழ்க்கையில் சாதிக்க தேவையான நல்ல விஷயங்களை, நுாறு புத்தகம் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய நுாற்றுக்கும் அதிகமான விஷயங்களை, அந்துமணி இந்த ஒரே புத்தகத்தில் நறுக் சுருக்காக தெரிவித்துள்ளார்.
அவற்றில் சில:
‘முள்ளிற்கு பின்னால் தான், சுவையான பலாப்பழம் இருக்கிறது. அது போல நம் பிரச்னைகளுக்கு பின்னால் தான், நல்ல வாழ்க்கையும் அமைந்துள்ளது. அதனால், எதிலும் பொறுமை காக்க வேண்டும்!’
‘மற்றவர்களுக்கு செய்யும் சேவை, அது நமக்கே செய்து கொள்ளும் சேவை; மற்றவர்களுக்கு செய்யும் தொண்டு, அது நமக்கே செய்து கொள்ளும் தொண்டு. இது தான் தர்மம்...’ என்று தர்மம் குறித்த கேள்விக்கு விளக்கம் தருகிறார்.
இதன்மூலம், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களால் இயன்ற சேவையை செய்யுங்கள் என்று நமக்கு வேண்டுகோள் விடுக்கிறார்.இப்புத்தகத்தில், அவருக்கே உரித்தான, அவரது நையாண்டிகளுக்கும், துணச்சலுக்கும் பஞ்சமே இல்லை.
‘மகிழ்ச்சியில் பெரிய மகிழ்ச்சி என்பது, அடுத்தவர்களை சந்தோஷப்படுத்திப் பார்ப்பது தான்...’ என்று ஒரு பதிலில் குறிப்பிட்டுள்ளார். இந்த புத்தகத்தை தந்ததன் மூலம், பலரை சந்தோஷப்படுத்தி அவரே அதற்கு சிறந்த உதாரணமாயிருக்கிறார்.
புதிய சிந்தனையில், புதிய பார்வையில் உதித்துள்ள இப்புத்தகத்தை படித்து, பகிர்வதன் மூலம் நீங்களும் சந்தோஷ மனிதராக மாறலாம்!
– எல்.முருகராஜ்
புல் அவுட் ஒன்று
‘‘சென்னையைப் புரட்டி போட்ட கன மழை பற்றித்தான் இப்போது எல்லோரும் பேசிக்கொண்டிருக்கின்றனர் ஆனால் இப்படி ஒன்று நடக்கப் போகிறது என்பதை அந்துமணி இந்த வருடத்தின் ஆரம்பம் முதலே வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதத்தில் பல வாரங்களாக சொல்லி வந்திருக்கிறார் என்பதை இந்த புத்தகத்தின் மூலம் அறியும் போது ஆச்சரியம் ஏற்படுகிறது’’
புல் அவுட் இரண்டு
மற்றவர்களுக்கு செய்யும் சேவை செய்யும் அது நமக்கே செய்து கொள்ளும் சேவை,மற்றவர்களுக்கு செய்யும் தொண்டு அது நமக்கே செய்துகொள்ளும் தொண்டு இதுதான் தர்மம் என்று விளக்கம் தருகிறார் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களால் இயன்ற சேவையை செய்யுங்கள் என்று நேர்முகமாக இதன் மூலம் வேண்டுகோள் விடுக்கிறார்.