உலகம் முழுக்கவே பருவ காலங்கள் மாறிவிட்டன. தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குள் ஒரு வெள்ளமும், இரண்டாண்டுகளுக்குள் ஒரு வறட்சியும் வந்து விடுகின்றன. இவற்றுக்கான தீர்வு, நீர் மேலாண்மை மட்டுமே. நீர் மேலாண்மை செய்யும் முன், நில அமைப்பை அறிவது அவசியம்.
ஒரு ஊருக்கு பொருந்தும் நீர் மேலாண்மை திட்டம், இன்னொரு ஊருக்கு பொருந்தாது. காரணம், அப்படிபட்ட நில அமைப்பு நம்முடையது.
அதை அறிந்து, திட்டங்களை தீட்டினால், வெள்ளத்தையும், வறட்சியையும் வெல்லலாம்.
அப்படி செய்தால், குடிநீரை கடலுக்கு அனுப்பி, கடல்நீரை குடிநீராக்க வேண்டிய அவசியமோ, கழிவுநீரை மறுசுழற்சி செய்து, தொழிற்சாலைகளை இயக்க வேண்டிய கட்டாயமோ ஏற்படாது.
தமிழகத்தின் விவசாயமும், தொழிலும் பிற மாநில தண்ணீரை நம்பியிருக்க; நமக்கான தண்ணீரை கடலில் வடிப்பதும், பின் கண்ணீர் வடிப்பதும் வாடிக்கையாகிறது. இதற்கு, நகரப்பெருக்கமும், மக்கள் பிதுக்கமும் தான் காரணமா? நாம் என்ன கட்டமைப்பை செய்தால் நம்மை காக்க முடியும். நம் இலக்கியங்களும், முன்னோர்களும், அறிவியலும், அரசியலும் சொல்வது என்ன?
தமிழக அணைகளின் தன்மை என்ன, அவற்றுக்கான தண்ணீர் வழங்கும் மாநில அணைகளின் உண்மை என்ன? நதி நீர் இணைப்புக்கான சாத்தியங்கள் என்னென்ன? நம் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் தண்ணீரை நாம் எப்படி அளந்து பயன்படுத்த வேண்டும்? மழையை எப்படி உள்வாங்க வேண்டும் என்பதை விரிவாக அலசுகிறது, நடுவூர் சிவா எழுதிய நுால்.
– வாகைமதி