கருத்து சுவையும், கவிதை நயமும் இணைந்த கற்கண்டு புதையலாக உள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். பத்து பகுதிகளாக உள்ளது.
‘அவலம் என்பது அறியாமை; எல்லாம் அதிர்ஷ்டம் என்பது முயலாமை’ என்ற கவிதை ஒரு சோறு பதம். அடுத்து, ‘உன்னை முதலில் நம்பு; அதுதான் ஊன்றி படர கொம்பு’ என நம்பிக்கை நாற்று நடுகிறது. தன்னம்பிக்கை ஊட்டும், ‘சிற்றடிகள் பட்டாலே இறந்து போகும் சிற்றெறும்பே... உன்னாலே யானை சாகும்’ என்ற பாட்டும் உள்ளது.
புதுமையான சிந்தனையுடன் இயற்கை உண்மைகளை உரைக்கிறது. அற்புதமாக, ‘தனிப் பூவே வாழைப்பூ! குலமகள் போல தரை பார்த்து நிற்கும் பூ’ என ஒப்புமை சொல்கிறது. படித்து, நினைத்து இன்புறத்தக்க பாடல்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால்.
– சீத்தலைச் சாத்தன்