முத்தமிழில் இயல் நுாலாக தொல்காப்பியம், இசை நுால்களாக சிகணடி முனிவரின் இசை நுணுக்கம் மற்றும் அறிவனாரின் ஐந்தொகை எனும் பஞ்சமரபு, நாடகத்துக்கு மதிவாணரின் நாடகத் தமிழ் ஆகிய நுால்கள், பழமையானதாக கருதப்படுகின்றன. இதில், இசைக்கு இலக்கணங்கள் உருவாக்கப்பட்டு நரம்பிசை, குழலிசை, கண்டம் எனும் குரலிசை, கூத்து எனும் நிருத்த இசை மற்றும் தாள இசை என ஐந்து வகையான மரபிசையை பற்றி விளக்குவதே பஞ்ச மரபு.
பஞ்ச மரபு பற்றிய குறிப்புகள், பல்வேறு தமிழ் இலக்கியங்களில் உள்ளதால், உ.வே.சா., உள்ளிட்டோர் தேடியும் கிடைக்கவில்லை. இதை, எழுமாத்துார் வேலம்பாளையம் வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர் என்பவர் தேடிக் கண்டுபிடித்தார். பொள்ளாச்சி நா.மகாலிங்கம், 1973ல் அதன் முதல் பாகத்தை பதிப்பித்தார். 1975ல், குடந்தை சந்தரேசனார் குறிப்புடன் வெளியிட்டார். கடினமான இந்த நுாலை, 20 ஆண்டுகளுக்கு பின், இசையறிஞர் வீ.ப.கா.சுந்தரத்தின் விருத்தியுரையையும் சேர்த்து வெளியிட்டார்.
ஆனால், அந்த நுால்கள் கிடைக்காத நிலையில், பல்கலைகள் மற்றும் ஆய்வாளர், இசை ஆர்வலர்கள் இந்த நுாலை மறுபதிப்பு செய்ய, தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, இசையறிஞர் அரிமளம் பத்மநாபனின் அணிந்துரையுடன், 30 ஆண்டுகளுக்கு பின் இந்த அரிய புத்தகம் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.