அறிந்தோ அறியாமலோ, தெரிந்தோ தெரியாமலோ அந்துமணியின் ஒவ்வொரு புத்தகமும், ஒரு சிறப்பிதழாக அமைந்து விடுகிறது. அவ்வகையில் இந்தப் புத்தகம் உணவுச் சிறப்பிதழாக வந்துள்ளது.
‘மோர்க் களி செய்வது எப்படி?’ என்பதில் துவங்கி, புளிச்சோறு கிண்டுவது வரை பலவித பலகாரங்களின் செய்முறைகளையும், அதன் தனித்துவத்தையும், ‘சுவை’பட விளக்கியுள்ளார்.
அதே நேரம், இதை சமையல் குறிப்பு என்று ஒதுக்கிவிட முடியாது. அவருக்கே உரிதான நகைச்சுவை உணர்வுடன் ஒவ்வொரு குறிப்பையும் தந்துள்ளதால், எந்த ஒரு வரியையும் தவிர்க்க முடியாது.
@subtitle@ வச்சு வச்சு சாப்பிட்டதே புளியோதரை@@subtitle@@
புளிச்சோறு காலம் காலமாக நம்மில் பலருக்கு வழிச் சோறாக பயன்படுகிறது. ‘ரெப்ரிஜிரேட்டர்’ கண்டுபிடிப்பதற்கு முன், நாம் வச்சு வச்சு சாப்பிட்டது இந்த புளிச்சோறு தான்!
புளியோதரைக்கு தேவையான சோற்றை வடிக்கும் பதம் மிக முக்கியம். புதுமணத் தம்பதி போல பின்னிப் பிணைந்து குழைந்து விடாமல், 10 ஆண்டுகளான தம்பதி போல, சாதம் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்க வேண்டும்.
அதே போல நீங்கள் பில்கேட்ஸ் குடும்பமாக கூட இருங்கள்... அதற்காக, புளியோதரையில் நெய் ஊற்றக்கூடாது; நல்ல எண்ணெய் தான், ‘பெஸ்ட்!’ அதிலும், செக்கில் ஆட்டிய நல்ல எண்ணெய் என்றால் சாலச் சிறந்தது.
புளியோதரையின் நல்ல நண்பன் நிலக்கடலை. ஒரு வாய் அள்ளிப்போடும் போது பற்களில் கடிபடும் ஒரு நிலக்கடலை, 10 பாதம் பருப்புக்கு இணை...
இப்படித்தான் போகிறது எல்லா சமையல் குறிப்பும். சிரித்துக் கொண்டே சமைக்கலாம் அல்லது சமைத்துக் கொண்டே சிரிக்கலாம்!
இப்போது வெளிநாடு சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அப்படிச் செல்பவர்கள் அறையை காலி செய்யும் போது, அங்கு இருக்கும், ‘ஹேர் டிரையர்’ போன்ற பொருட்களை லவட்டிக் கொண்டு வந்து, ரிசப்ஷனில் மாட்டிக் கொண்டு அவமானப்படுகின்றனர்.
இது, உங்களுக்கு ஏற்படும் அவமானம் அல்ல; நாட்டிற்கு ஏற்படும் அவமானம். ஆகவே, அறையில் இருப்பதை அனுபவிப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்று வெளிநாடு சுற்றுலா செல்பவர்களுக்கு பயண, ‘டிப்ஸ்’ தருகிறார் அந்துமணி.
சந்தன கடத்தல் வீரப்பன் பற்றி நிறைய கதைகள் இருக்கின்றன. ஆனால், வீரப்பனே சொன்ன, ‘யானை கதை’ ஒன்று இப்புத்தகத்தில் உள்ளது; அவசியம் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய கதை அது!
தேவை தான், கண்டுபிடிப்பின் தாய் என்பதற்கு உதாரணமாக, ‘அமுல்’ நிறுவனம் ஒவ்வொரு கட்டத்திலும் எடுத்த முயற்சி, அடைந்த வெற்றியை அழகாக விளக்கியுள்ளார். தொழில் துவங்க விரும்பும் ஒவ்வொருவரும் உள்வாங்க வேண்டிய விஷயங்கள்.
@subtitle@ வாசகன் – யாசகன் வித்தியாசம்@@subtitle@@
பல சமயம் அந்துமணி தன் நண்பர்களுடன் நடத்தும் உரையாடலில், நல்ல தத்துவங்கள் வந்து விழும். அப்படியொரு உரையாடலின் போது நண்பர் கூறுகிறார், ‘வாசகனுக்கும் – யாசகனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?’ என்று கேட்டு, பின் அவரே பதிலும் தருகிறார்.
‘ஒரு புத்தகத்தை விலை கொடுத்து வாங்கி படிப்பவன் வாசகன்; அப்படி வாங்கியவனிடம் இருந்து சும்மா வாங்கி படிப்பவன் யாசகன்...’ என்கிறார். இதன் மூலம் ஒரு புத்தகத்தை விலை கொடுத்து வாங்குவதே படைப்பாளிக்கும், படைப்பிற்கும் பெருமை சேர்க்கும் என்பதை வலிமையாகச் சொல்கிறார்.
க, உ, என்றால் தமிழில் ஒன்று, இரண்டு என்பது தெரியும். ஆனால், இதை எத்தனை பேரால் மனப்பாடமாக 10 வரை மனதில் வைத்துக்கொள்ள முடியும்?
அந்துமணி சொல்லும் ‘பார்முலா’வை மனிதில் கொண்டால், யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தமிழில் எண்ணை எழுதலாம், படிக்கலாம்.
@subtitle@ அந்துமணிக்கு எழுதக் கற்றுக் கொடுத்தவர்@@subtitle@@
‘எனக்கு எழுதுவது எப்படி என்று எனக்கு கற்றுக் கொடுத்தவர், ஜே.எஸ்.மைக்கேல். அவர், ‘தினமலர்’ செய்தி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்; தற்போது, அமரத்துவம் அடைந்துவிட்டார்...’ என்று அவரைப் பற்றிய குறிப்பை தரும் அந்துமணி, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவர் எழுதிய கடிதம் ஒன்றில் உள்ள கருத்தை எடுத்து, விரிவாக எழுதியிருக்கிறார். வரலாற்று விரும்பிகளுக்கு இது பெரும் விருந்தாகும்.
தினமலர் – வாரமலர் தன் வாசகர்களின் படைப்புகளுக்கு பெரும் வெகுமதி தருவது வெளிப்படை. ஒரு வாசகர் கடிதத்திற்கு, 3,000 ரூபாய் வரை அள்ளித் தருகிறது. அதனால் தான், வாசகர்கள் தினமலர் நாளிதழைக் கொண்டாடுகின்றனர்.
இப்பணப் பரிசு தரும் திட்டம், 1984ம் ஆண்டு குறுக்கெழுத்துப் போட்டிக்கு, 100 ரூபாய் பரிசு தருவதன் மூலம் துவங்கியது. அந்த 100 ரூபாய் பரிசை, முதன் முதலில் பெற்றவர் கடலுாரைச் சேர்ந்த கடல் நாகராஜன் ஆவார். அவரைப் பற்றி அவர் படத்துடன், அவரது கருத்தையும் சேர்த்து வெளியிட்டுள்ளார். படிக்க மிகவும் சுவராசியமாக இருக்கிறது.
தாழ்வு மனப்பான்மையை போக்க ஆக்கப்பூர்வமான வழிகளைச் சொல்லியுள்ளார். மிகவும் பயனுள்ள உடனே பலன் தரும் வழியும் கூட!
ஒரு வீட்டு அம்மணி, பிச்சைக்காரனுக்கு சாப்பாடு போட்டார்; சாப்பாட்டை பெற்றுக் கொண்ட பிச்சைக்காரன், ‘அம்மா... நேற்று நீங்க கொடுத்த சாப்பாட்டில், சாம்பாரில் ஒரே உப்பு; சாதம் சரியா வேகலை; பொரியலை வாயில் வைக்கவே முடியல...’ என்றான்.
‘கல்யாணமாகி 20 வருஷமாகுது; என் புருஷன் கூட எதுவும் சொல்லலை. உனக்கு கொழுப்பு அதிகமாயிடுச்சா...’ என்று கேட்டார் அந்த அம்மாள்.
‘அம்மா... உங்க வீட்டுக்காரர் தான் இதை எல்லாம் என்கிட்ட சொல்லி, ‘நீயாவது கேளுடா’ என்றார். அதான் கேட்டேன்...’ என்றான்.
புத்தகம் சீரியசாக செல்லும் போது, இப்படி சில ஜோக்குகளை நடு நடுவே போட்டு, படிக்கும் வாசகர்களை, ‘குபீர்’ரென சிரிக்க வைத்துவிடுகிறார் அந்துமணி.
இசைப் பேரரசி என்று புகழப்படும் எம்.எஸ்.சுப்புலட்சுமி, நாரதராக ஒரு படத்தில் நடித்திருக்கிறார். முதலில், ஆண் வேடமிட்டு நடிக்க மறுத்தவர், அந்த வேடத்தில் நடித்ததன் மூலம் கிடைக்கும் பணம், ஓர் உயர்ந்த லட்சியத்திற்கு பயன்படப் போகிறது என்பதை அறிந்ததும் ஒத்துக்கொண்டார்.
அந்த லட்சியம் என்னவென்பதை அறிந்து கொள்ளவும், அவர் நாரதர் வேடமிட்ட படத்தைப் பார்க்கவும் புத்தகம் வாங்குவது தான் ஒரே வழி!
நடிகவேள் எம்.ஆர்.ராதா ஒரு நகைச்சுவை திலகம் என்பதை, அவரைப் பற்றி 149ம் பக்கத்தில் இருந்து, 152ம் பக்கம் வரை இடம் பெற்றுள்ள துணுக்குகள் சொல்கின்றன. அதிலும், அவர் குண்டடிபட்டு மருத்துவமனையில் இருந்த போது, பார்க்க வந்த டைரக்டர் நீலகண்டனிடம் பேசிய வார்த்தை சிரிப்பை வரவழைக்கக் கூடியது.
@subtitle@ பழைய நாத்திகர்கள் எல்லாம் பழனியில்...@@subtitle@@
அதே போல, ‘பழைய நாத்திகர்களை எல்லாம் நான் பழனியிலும், திருப்பதியிலும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்...’ என்று சொல்லும் கண்ணதாசன் பற்றிய குறிப்புகளும் தெரிந்து கொள்ள வேண்டியவையே!
‘இங்கே அழைத்துக் கொண்டு வந்துவிடு...’ என்பதன் சுருக்க வார்த்தையே, ‘இட்டாந்துரு’ என்று எல்லாரும் கலாய்க்கும் மெட்ராஷ் பாஷைக்கு அந்துமணி வக்காலத்து வாங்குகிறார். கூடவே, நிறைய வார்த்தைகளை சொல்லிவிட்டு முடிக்கும் போது, ‘மெட்ராஸ் பாஷை ஷோக்கா கீது பா’ என்று ரசனையாக முடித்திருக்கிறார்.
நம்மைத் துாங்கச் செய்வதை விட, துாங்க விடாமல் சிந்திக்கச் செய்வதே நல்ல புத்தகத்தின் தன்மை என்று புத்தகத்தின் ஓர் இடத்தில், ஓர் வாசகம் இடம் பெற்றிருக்கிறது. அந்துமணியின் இந்த புத்தகமும் அப்படிபட்டது தான்!
– எல்.முருகராஜ்
தேவை தான் கண்டுபிடிப்பின் தாய் என்பதற்கு உதாரணமாக, அமுல் நிறுவனம் ஒவ்வொரு கட்டத்திலும் எடுத்த முயற்சி, அடைந்த வெற்றியை அழகாக விளக்கியுள்ளார். தொழில் துவங்க விரும்பும் ஒவ்வொருவரும் உள்வாங்க வேண்டிய விஷயங்கள்!
‘இங்கே அழைத்துக் கொண்டு வந்து விடு’ என்பதன் சுருக்க வார்த்தையே, ‘இட்டாந்துரு’ என்று எல்லாரும் கலாய்க்கும் மெட்ராஷ் பாஷைக்கு, அந்துமணி வக்காலத்து வாங்குகிறார். கூடவே, நிறைய வார்த்தைகளை சொல்லிவிட்டு முடிக்கும் போது, ‘மெட்ராஸ் பாஷை ஷோக்கா கீது பா’ என்று ரசனையாக முடித்திருக்கிறார்!