சுதந்திரப் போராட்டம் தொட்டு, இன்றைய தமிழக கவர்னர்- – முதல்வர் மோதல் வரைக்குமான பிரச்னைகளை ஆராயும் அருமையான நுால்.
நுாலாசிரியர் பத்திரிகையாளராக தனித்துவம் மிக்கவராக விளங்குபவர் என்பதால், எழுத்து நடைக்கு பஞ்சமில்லை. இவ்வளவு எளிமையாக பெரிய பெரிய விஷயங்களை தந்துள்ளது கிடைத்தற்கரியது.
குறிப்பாக, கச்சத்தீவை தாரை வார்த்திருக்கவே கூடாது என்று ஆணித்தரமாக கூறுகிறார். அதை மீண்டும் பெற என்னென்ன வழிகளை கையாளலாம் என்பதையும் சொல்லி இருக்கிறார். உதாரணத்துக்கு, சில நாடுகள் இதே போல இழந்த தங்கள் தேசத்தின் பகுதியை திரும்பப் பெற்ற வரலாறுகளையும் கூறியிருக்கிறார்.
சுதந்திரப் போராட்டத்தின் போது, நேதாஜி எந்தச் சூழலில் காணாமல் போனார்; அவர் உயிருடன் இருக்கிறார் என்று எழுந்த பிரச்னையை அலசி ஆராய்ந்துள்ளார். இந்தக் கட்டுரைகளில், பலருக்கும் தெரியாத தகவல்கள் உள்ளன.
அன்பளிப்பாக வந்த தங்கப் பேனாவை வேண்டாம் என மறுத்து, லஞ்சம் என்ற சொல்லையே அறியாமல் இருந்த தமிழக அமைச்சர் யார் என தெரியுமா? தெரியாதவர்கள் இந்த புத்தகத்தை படித்து தகவல் அறியலாம்.
தென்னிந்திய விடுதலைப் போராட்ட வீரர்களில் நாம் அறிந்த பெயர்கள் கொஞ்சமே. இந்த நுாலிலோ, ஒரு பெரும் பட்டியலையே தீட்டியுள்ளார். 16 தலைப்புகளில் அரிய தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.
– தி.செல்லப்பா