தலைப்பிற்கு ஏற்றவாறு எளிமையும், இனிமையும் கொண்டதாக அமைந்துள்ள நுால். இரண்டடியில் உள்ள திருக்குறளை போல, உரையும் சுருக்கமாகவும், அற்புதமாகவும் இருக்கிறது. எளிய முறையில் எல்லாருக்கும் புரியும் வண்ணம் எழுதியுள்ளார்.
தமிழ்த்தாய்க்கு மற்றுமோர் அணிகலனாக உரை அமைந்துள்ளது. நல்ல உரை என்பது ஆய்வுத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்; அதாவது காலத்திற்கு ஏற்ற உரையாக இருக்க வேண்டும். அந்த வகையில் மிகவும் நேரடித் தன்மை கொண்டது.
எல்லாரும் என்ன கருத்தை சொல்கின்றனரோ அதைத்தான் இவரும் சொல்கிறார். ஆனால், இவர் சொல்வது சுருக்கமாகவும், மனதில் ஆழப் பதிவதாகவும் இருக்கிறது.
உரையின் அழகு சுருங்கக் கூறியிருப்பதில் மட்டுமன்று; இருக்க வேண்டியதை தெரிவித்த அதே வேகத்தில், இருக்கக்கூடாததை எடுத்துரைத்துள்ளது.
உரிய காலத்தையும், இடத்தையும் தேர்ந்தெடுத்து செயல்பட்டால் உலகத்தையே கையில் அடக்கலாம். படிக்க வேண்டிய நுால்களை சந்தேகமின்றி படிக்க வேண்டும். படித்த பின் அதன்படி நடக்க வேண்டும் போன்ற விளக்கங்கள் பசுமரத்தாணியாக பதிகின்றன.
பட்டை தீட்டப்பட்ட வைரத்தின் தன்மையைப் போல் உள்ள உரை, நன்னுாலில் உள்ள சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற கூற்றுக்கு ஒப்பாக அமைந்திருக்கிறது. உரையைப் படிக்கும்போதே, மேலும் மேலும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதோடு, பாமர மக்களும் திருக்குறளை படிக்கலாம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
உரையாசிரியர் வைகைச்செல்வன் கையாண்டுள்ள எளிய நடை, எளிய சொல்லாட்சி, எளிய பதம் எல்லாம் தனிச்சிறப்பு. இத்தனை சிறப்புகளுடன் ஆங்கில மொழிபெயர்ப்பும் சேர்த்து செய்திருப்பது அருமையிலும் அருமையாக உள்ளது.
– இளங்கோவன்