பண்பலை வானொலி உரைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். அப்பா, அம்மாவைப் பற்றி இலக்கியம் எடுத்துரைக்கும் செய்திகள் எல்லாம் எளிய நடையில் தரப்பட்டுள்ளன.
இயற்றமிழ் இன்பம் என்ற கட்டுரையில் அவ்வையார், குமரகுருபரர், திருமூலர் பாடல்கள் சொற்பொழிவாக்கப்பட்டுள்ளன. தொல்காப்பியர், உலக இலக்கண முன்னோடி, இயற்றமிழின் தொடக்கம் என்று அறிமுகம் செய்கிறார். ஓசை தரும் இன்பத்தை கம்பன் படைப்பில் கவிதை நயங்களை சிந்தைக்கு விருந்தாக்கியுள்ளார்.
குற்றாலக் குறவஞ்சியில் இடம்பெற்றுள்ள ‘வானரங்கள் கனி கொடுத்து’ என்னும் பாடலுக்கு இனிய விளக்கத்தை தந்துள்ளார். வசந்த வல்லி பந்தடிக்கும் போது உள்ளம் துள்ளாட்டம் போடுவதை எடுத்துரைத்துள்ளார். இலக்கிய இன்பத்தை எளிய நடையில் தரும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்