சிவன், விஷ்ணு, முருகன், கணபதி என 1,000 தெய்வங்கள் வழிபாடு பாரத பூமியில் இருந்தாலும், அம்மன் வழிபாட்டுக்கு என்றுமே தனி மவுசு. சிவன் கோவில்களை எடுத்துக் கொள்ளுங்கள். அனேக கோவில்களில் தனித்திருக்க மாட்டார்; கூடவே, அம்மனும் இருப்பாள். சக்தியின்றி சிவமில்லை என்ற வாசகம் இதை நிரூபிக்கும்.
அம்மன்களுக்கு தனிக்கோவில்கள் நம் நாட்டில் ஏராளம். சொல்லப் போனால், மதுரை போன்ற சில ஊர்களிலுள்ள சிவாலயங்களில், அம்மனுக்கு தான் முக்கியத்துவம். அம்மனை தாண்டித் தான் சிவன் பக்கமே செல்ல இயலும். ஒரு காலத்தில், ‘சாக்தம்’ என்ற தனி மதத்தையே அம்மனை வணங்குவோர் ஏற்படுத்தியிருந்தனர்.
அம்மன் பக்தர்கள் தரிசித்த கோவில்கள் ஒரு புறமிருக்க, தரிசிக்காத நுாற்றுக்கணக்கான கோவில்கள் உள்ளன. அங்கெல்லாம் சென்று வர இந்த நுால் வழிகாட்டும். குமரியில் துவங்கி, இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் உள்ள அம்மன் கோவில்கள் பற்றிய தொகுப்பாக உள்ளது.
வரலாறும், செல்லும் வழியும் மட்டுமல்ல. ஒவ்வொரு அம்மனுக்கும் உரிய 108 போற்றியும், பாடல்களும் சேர்த்து தொகுக்கப்பட்டிருப்பதால், அந்தந்த கோவில்களுக்குச் சென்று அமர்ந்து மனம் குளிர அம்பாளை புகழ்ந்து பாடி வரலாம்.
உங்கள் குரல் கேட்க அவள் காத்திருக்கிறாள். எவ்வளவோ சிரமப்பட்டு, இந்த தகவல்களை சேர்த்திருப்பது, புத்தகத்தைப் படித்தால் புரியும்.
இப்போது புரிந்திருக்குமே இந்த நுாலின் முக்கியத்துவம்! எல்லாரும் கையில் இந்தப் புத்தகத்துடன், அருள் தரும் அம்மன் கோவில்களுக்கு புறப்படுங்கள்; அம்பாளை தரிசித்து அனைத்து நலன்களையும் பெற்று வாருங்கள்.
– தி.செல்லப்பா