இந்த நுாலில், ஏழு திவ்யதேசங்கள் குறித்த தகவல்கள் அடங்கியுள்ளன. இவற்றை மாவட்ட வாரியாக தரிசிக்கும் வகையில் வழிகாட்டுகிறது.
ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் 15 பக்கங்களில் விளக்கமளிக்கிறது. சென்னை அருகே மாமல்லபுரம், திருவிடந்தை, திருநீர்மலை, திருவல்லிக்கேணி, திருநின்றவூர், திருவள்ளூர் மற்றும் வேலுார் மாவட்டம் சோளிங்கர் திருத்தலம் குறித்த வரலாறும் இடம் பெற்றுள்ளது.
ஒரு கோவிலுக்குச் சென்றால், ஆற அமர தரிசித்து வருவது தான், அந்த தெய்வத்தின் அருளை அள்ளித் தரும். இந்த நுாலை கையிலே எடுத்துச் சென்றால், படித்த விசேஷங்களை எல்லாம் எளிதாகப் பார்த்து வரலாம். ஏதோ போனோம், ஓடி வந்தோம் என்றில்லாமல், பெருமாளை தரிசித்துவிட்டு, அவரை பாடியும் வரலாம்.
பாடல்களுக்கென்று தனிப்புத்தகம் தேவையில்லை. இந்த நுாலிலேயே, திவ்யதேசங்கள் குறித்த ஆழ்வார்களின் பாசுரங்களும் இருப்பதால், ஓரிடத்தில் அமர்ந்து, பெருமாளைப் பாடி வரும் பேறையும் பெறலாம். வெறும் பாடல் மட்டும் தானா! அந்தப் பாடலின் விளக்கவுரையும் இதில் இருக்கிறது.
பெருமாளை மட்டும் தான் தரிசிக்க முடியுமா என்றால், பகவானை விட பக்தனே பெரியவன் என்ற சித்தாந்தப்படி, திருவள்ளூர் தலத்தில் அஹோபிலத்தை ஆட்சி செய்த ஜீயர் பெருமக்களின் ஜீவ சமாதிகளையும் தரிசிக்கலாம் போன்ற அரிய தகவல்கள் இந்த நுாலில் உள்ளன.
இவற்றை தொகுப்பது என்பது அரிய பணி. ஆனால், வாசகர்களுக்கு சிறந்ததை அர்ப்பணிக்க வேண்டும் என்ற மனமுள்ளவர்களுக்கு இது எளிய பணி. இதை பிரபு சங்கரும், நுாலை வெளியிட்ட தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தாரும் சிறப்பாகச் செய்துள்ளனர். அரியவை நம் இல்லத்தில் இருப்பது தானே பெருமை.
– தி.செல்லப்பா