நவீன ரக உணவுகளான பர்கர், பீட்சா போன்றவை பிரபலமாகி உள்ள நிலையில், பழைய சோறின் மகிமை குறித்து மிகத் துணிச்சலுடன் எழுதப்பட்டுள்ள புத்தகம். இளைஞர்களும் ஏற்றுக் கொள்ளத்தக்க அளவில் ஆதாரப்பூர்வ அறிவியல் விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த புத்தகத்தில் இருக்கும் ஆதாரங்கள்:
சமைத்த 100 கிராம் சோறில், 3.4 மில்லி கிராமாக இருக்கும் இரும்புச் சத்து, பழைய சோறில் 73.91 மில்லி கிராம் வரை அதிகரிக்கிறது. சோடியம் உப்பு குறைகிறது. பொட்டாசியம், கால்சியம் அளவு உயர்கிறது.
சோறு முக்கால் பாகம் வெந்து கொண்டிருக்கும் போது வருகிற கொதிகஞ்சியையும், வெந்த பிறகு வடி கஞ்சியையும் சேர்த்து பழைய சோறில் ஊற்றி உருவாகும் நீராகாரத்தை காலையில் எழுந்ததும், அரை லிட்டர் முதல் 1 லிட்டர் வரை குடித்தால், மலங்கழித்தல் எளிதாக நிகழும்.
காலையில் நீராகாரம், பழைய சோறு, தயிர், சிறிய வெங்காயம் சாப்பிட்டால் மூல நோயைக் கட்டுப்படுத்தும். வெங்காயத்தில் உள்ள சக்தி ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து, மாரடைப்பு வருவதைத் தடுக்கிறது.
நீராகாரம் குடிப்பதால் உடலில் இருக்கும் நச்சுப் பொருட்கள் வெளியேற்றப்பட்டு, ரத்த அழுத்தம் சீராக்கப்படுகிறது. வெப்ப மயக்கம் (சன் ஸ்ட்ரோக்) பழைய சோறு சாப்பிடுபவர்களைத் தாக்காது. அம்மை போன்ற தொற்று நோய்களைத் தடுக்கும். ரத்த வெள்ளை அணுக்களை அதிகரிக்க வைக்கிறது.
பழைய சோறு, நீராகாரம், சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிடுவது தாய் – சேய்க்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். பெருங்குடல் அழற்சி நோய்க்கு அறுவை சிகிச்சைக்குப் பதில் பழைய சோறு மருந்தாகிறது. பழைய சோறில் விதவிதமான உணவு வகைகளை செய்து சாப்பிடலாம். இப்படி அதன் அருமை பெருமை அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளது; அதோடு வாழ்க்கையும் பழைய சோறு போலத்தான் என்று விளக்கும் பகுதி சிந்திக்க வைக்கும்.
– இளங்கோவன்