இப்போது இருக்கும் குழப்பமான பிரச்னை உணவு சாப்பிடுவது... உடல் பருமனாக இருந்தால், ஒல்லியாக இருந்தால் என்ன சாப்பிடுவது... கர்ப்பிணிக்கு ஏற்ற உணவு, முதியோருக்கு இலகுவான உணவு எது... சிறுவர் ருசிக்கும் உணவு பற்றியெல்லாம் சந்தேகங்கள் ஏற்படும். இதற்கெல்லாம் விளக்கம் தருவது போல, ‘சமூக ஊடகத்தில் பரிமாறும் தகவல்கள் இன்னும் குழப்பி விடுகின்றன. அவற்றை பார்த்து உணவு முறைகளை தீர்மானித்தால் எதிர்விளைவுகள் ஏற்படும்!
சரி... ஆரோக்கியம் காக்க என்ன தான் சாப்பிடுவது?
மருத்துவ சேவையில், 44 வருட அனுபவம் பெற்று, 59 மருத்துவ புத்தகங்கள் எழுதியுள்ள டாக்டர், என்ன சாப்பிட வேண்டும் என்று புரியும்படி சொன்னால் சரியாக இருக்கும் அல்லவா? அப்படி ஒரு புத்தகம் தான் நோய் தீர்க்கும் டயட் பிளான்.
நோயுற்றோர் மட்டும் படிக்க வேண்டிய புத்தகம் அல்ல; எந்த நோயும் இல்லாதோரும், ஆரோக்கியம் காக்க அற்புத உணவு முறைகளை எளிய தமிழில் சொல்கிறது.
அல்சர், சிறுநீரக நோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு தனித்தனி உணவு விபரங்களும் இடம் பெற்றுள்ளன. ‘எது சாப்பிட்டாலும் வாயுத்தொல்லை என்று எரிச்சலடைவோருக்கு சரியான விடை தரப்பட்டுள்ளது. ‘வாயுத் தொல்லை உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவு’ என்று ஆறு பக்கங்கள் எழுதி தனி ‘டயட் சார்ட்’ தந்துள்ளார் டாக்டர்.
பற்கள், கண்கள், எலும்புகள் போன்றவற்றை வலுவாக்கும் உணவு வகைகளை தேடி குழம்ப வேண்டாம். எளிமையாக மருத்துவ ரீதியாக இந்நுாலில் எழுதியுள்ளதை படித்தால் போதும். பீட்சா, பர்கர் மேல் பாசம் வைத்திருக்கும் டீன்ஏஜ்காரர்களும் கவலைப்பட வேண்டாம். அவர்களுக்கும் ஆரோக்கிய மெனு இருக்கிறது.
மொத்தத்தில் இது சமையலறையில் இருக்க வேண்டிய மெனு புத்தகம் அல்ல; வீட்டில் எல்லாரும் படிக்க வேண்டிய உணவு வழிகாட்டி நுால்.
-– ஜி.வி.ஆர்.,