ராமாயணம் உலகறிந்த நிகழ்வு; அதில் புதைந்திருக்கும், அறிந்திராத அல்லது கவனிக்கத் தவறிய நிகழ்வுகளை கண் முன் கொண்டு வந்திருக்கும் நுால். கம்ப ராமாயணம் படித்த பலரும் கவனத்தில் இருத்திக் கொள்ளத் தவறிய சில கதாபாத்திரங்களைப் பற்றி எழுத விரும்பியதன் விளைவாக மலர்ந்துள்ளது.
ராமாவதாரத்திற்கு காரணமான புத்ர காமேஷ்டி யாகம் செய்த ரிஷ்யசிருங்கர், சீதையைக் கரம் பிடித்த ராமன், தம்பதி சமேதராக முதலில் கைகேயிடம் வணங்கி ஆசி பெற்றபோது, பொறாமைப்படாத கோசலையின் பெருந்தன்மை கூறப்பட்டுள்ளது. சீதையின் நெருங்கிய தோழி நீலமாலை, ராவணன் வதத்திற்கு ஆதி காரணமான ஜனகன் பற்றியுள்ளது.
ஊனத்தை எள்ளி நகையாடுவதை சகித்துக் கொள்ள முடியாத மந்தரை, பரிதாபத்துக்கு உரிய சுமந்திரன், பரதனை கேகய நாட்டுக்கு அனுப்பிய தசரதனின் தந்திரம் பற்றி குறிப்பிடுகிறது.
அயோத்தி மக்களை போக்கு காட்டி ஏமாற்றிய ராமன், பரதனின் வருகையால் சினம் கொண்ட குகன், சாப விமோசனம் பெற்ற கபந்தன், சுக்ரீவனை அடையும் வழியைச் சொன்ன சபரி பற்றிய தகவல்கள் சுவையானவை.
லட்சுமணன் மீது காமம் கொண்ட அயோமுகி, தசரதன் நட்புக்கு மெருகூட்ட விரும்பிய ஜடாயு, ராவணனுடன் ஒப்பந்தம் போட்ட வாலி, இலங்கை நகருக்கு புதுப்பொலிவு கொடுத்த விஸ்வகர்மா என சுவாரசியம் தருகிறது.
ராவணனிடம் துாதனாகச் சென்ற அங்கதன், ராவணனுக்கு புத்திமதி கூறிய மாலியவான், சீதை மகிழத்தக்கவளாக ஆன திரிசடை மற்றும் சம்புமாலி பற்றியுள்ளது. கதாபாத்திரங்கள் குறித்த சுவையான தகவல்கள் நிரம்பியுள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்திலும் கம்பரின் பாடல்களை பொருத்தியுள்ளது, புத்தகத்துக்கு மணிமகுடமாக திகழ்கிறது. ராமாயணத்தை புதுமையான கோணத்தில் தெரிந்து கொள்ள உதவும் புத்தகம்.
-– இளங்கோவன்