புண்ணியத்தின் வடிவம் தெய்வம், பாவத்தின் உருவகம் அசுரன். இந்த இரண்டு தரப்புக்கும் எல்லா யுகங்களிலும், மோதல் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. புண்ணியம் செய்பவனும் தெய்வத்தை வணங்குகிறான்; தான் பெற்ற வரங்களை உலக நன்மைக்குப் பயன்படுத்துகிறான்.
பாவம் செய்ய எண்ணுபவனும், தெய்வத்தை வணங்கி, புண்ணியம் செய்தவன் பெற்றதை விட, அரிய பல வரங்களைப் பெறுகிறான். ஆனால், அவற்றை சுயலாபத்துக்கு பயன்படுத்துகிறான். அதோடு விட்டால் பரவாயில்லை; மற்றவர்களை துன்புறுத்தவும் செய்கிறான்.
ராவணன் சிவபக்தனாய் இருந்து என்ன பலன்! பெண்ணாசையால் புகழ் இழந்தானே! இது போன்ற அசுரர்கள் 30 பேரை தேர்வு செய்து, அவர்களின் பிறப்பு வரலாறு, பெற்ற வரங்கள், பிறருக்கு இழைத்த அநீதி, தெய்வங்களால் தண்டிக்கப்பட்டது உள்ளிட்ட விபரங்களை இந்நுாலில் தொகுத்திருக்கிறார், ஆசிரியர் தேனி மு.சுப்பிரமணி.
பல பத்திரிகைகளில் எழுதிய அனுபவம், அவரது எழுத்துகளில் மிளிர்கிறது.
காயத்ரி மந்திரம் என்னும் உயர்ந்த மந்திரத்தை சொல்லும் அருணாசுரன் கதையில், தேவகுரு பிரகஸ்பதி அவன்முன் தோன்றுகிறார்.
‘தேவர்களின் குருவாக இருந்தும், அவர்களின் எதிரியான என்னைப் பார்க்க வந்தது ஏன்?’ என அசுரன் கேட்கிறான். ‘அறிவுடையவர்கள் யாராயினும் எனக்குப் பிடிக்கும், அதிலும் நீ காயத்ரி சொல்கிறாயே...’ என்கிறார் பிரகஸ்பதி.
அசுரன் நெகிழ்ந்து போகிறான். அசுரன் மட்டுமல்ல, இந்த கட்டத்தில் வாசிக்கும் நாமும் உருகிப் போகிறோம். அசுரர் வரலாற்றைப் பற்றிய அருமையான நுால்.
– தி.செல்லப்பா