நெகிழ்வு தரும், ‘எல்லோரும் இன்புற்றிருக்க...’ என்ற பொன்மொழி முத்தாய்ப்புடன் கலகலக்கிறது விகடன் தீபாவளி மலர். மகிழ்ச்சியையும், தித்திப்பையும் தந்து, புத்துணர்வு ஊட்டும் வகையில் மலர்ந்துள்ளது.
எம்.ஜி.ஆர்., ரோஜாப்பூ ஏந்திய நிலையில் உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வரைபடம், முன் அட்டையை அலங்கரிக்கிறது. முதல்வராக பதவி வகித்தபோது விரிவுபடுத்திய சத்துணவு திட்டம் பற்றிய செய்திகள் வரலாற்றில் பெருமை மிகு பொக்கிஷம்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை விளக்கும் கட்டுரை சிறப்பு. ஓவியர் மணியன் செல்வன் கைவண்ணத்தில் கடவுள் படங்களுடன், பேட்டியும் கனிந்து ஜொலிக்கிறது.
மாமல்லபுரம் முதல் கோவில் பற்றிய தகவல்கள் பெருமை சேர்க்கிறது. சிவகங்கை கொற்றவாளீஸ்வரர், திருக்களர் பாரிஜாதவனேஸ்வரர் உள்ளிட்ட கோவில்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள செய்திகளில் வரலாற்றின் சிறப்பு மணம் கமழ்கிறது. குடிமல்லம் கோவில் குறித்த விவரிப்பு நேரடியாக சென்று பார்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
முந்திரி பழத்தை பயன்படுத்தி குளிர்பானம் தயாரிப்பு தொழில்நுட்பம் புதுமை அனுபவமாக மணம் பரப்புகிறது. அறிவுப்பூர்வமாக அணுகி வாழ்வில் வெற்றி பெற இளைஞர்களுக்கு வழிகாட்டுகிறது.
மன்னர் சரபோஜி பற்றி அவரது வாரிசு எழுதியுள்ள கட்டுரையும், எழுத்தாளர் கல்கி பற்றிய செய்திகளும் மெருகேற்றுகின்றன. இசை மீது விரிந்த பார்வையை ஏற்படுத்துகிறது இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுடனான உரையாடல்.
ஆன்மிகம், அறிவியல், கலை, இலக்கியம், பண்பாடு, இசை, நகைச்சுவை, சினிமா – சின்னத்திரை, வரலாறு என சுவை ததும்ப, ரசனைக்கு விருந்தாக மலர்ந்துள்ளது. சிறுகதைகள், கவிதைகளுக்கும் குறைவில்லை.
தீபாவளியை இனிமையாக்க வண்ணமயமாக ஜொலிக்கிறது, ஆனந்த விகடன் தீபாவளி மலர்.
– நிகி