இலங்கை, மலேஷியா என்று இரண்டு நாடுகளின் பின்னணியில் நடை போடும் அற்புதமான கதை நுால். அழிவுக்கு ஆயுதத்தை துாக்கியோர் அழிந்து போன விதத்தை வர்ணிக்கிறது. அது கண்களில் ரத்தம் வடிய வைக்கிறது.
கதையில் வரும் ஒரு பாத்திரத்தை இவர்தான் வில்லனோ என எண்ணும் போதே நல்லவன் ஆகிவிடுகிறது. நல்லவன் என எண்ணும் போது கபட வேடம் கலைந்து விடுகிறது. இப்படி அற்புதமான பாத்திரப்படைப்புகளை படித்தால் மனதில் பதியும்.
சமூகத்தை திருத்த வேண்டிய கடமை உடையோர் எல்லாம் உயிருக்கு பயந்து ஓடிவிட்டால், அநியாயங்களை தட்டிக் கேட்பது யார்... ஒரு நல்ல பத்திரிகையாளரின் பேச்சாக சுட்டிக்காட்டுகிறது. தத்ரூப வர்ணனைகள் உள்ளன. பரபரப்பான நிகழ்வுகளுடன் சுவாரசியமிக்க நாவல்.
– சீத்தலைச் சாத்தன்