ஆங்கில மொழியில் உரையாடலின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் நுால்.
கல்லுாரி படிப்பை முடித்தவுடன், சிறந்த நிறுவன பணி வாய்ப்பு பெறுவதில், தடைக்கல்லாக இருப்பது பலவீனமாக இருக்கும் ஆங்கில உரையாடல். நிறுவனங்களில் பலமொழி பேசும் பகுதிகளில் இருந்து வருவோர் சந்திக்கும்போது, தொடர்புக்கு ஆங்கில மொழியே பயன்படுகிறது.
இதை நிறைவேற்ற அந்த மொழியில் புலமை பெற வேண்டும் என்ற அவசியமில்லை. தயக்கம், தவறு இன்றி சரளமாக பேசினால் போதுமானது.
ஆங்கில மொழியை பயன்படுத்தி எந்த இடத்திலும் சிறப்பாக தொடர்பு கொள்ள ஏற்ற வகையில் வழிகாட்டியாக விளங்குகிறது இந்த புத்தகம்.
நண்பர்கள், தோழியர், கல்லுாரி, பள்ளி மாணவியர், சகோதரன், சகோதரி, கடைக்காரர் – வாடிக்கையாளர், தந்தை – மகன், அண்டைவீட்டார் என பல தரப்பட்டோர், தங்கள் எண்ணங்களை ஆங்கில மொழியில் பரிமாற உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
பள்ளி, நுாலகம், மருத்துவமனை, பஸ் நிலையம், மீன்கடை, காய்கறி அங்காடி, திருமண வீடு, நடைப்பயிற்சி, சுற்றுலா, ரயில் நிலையம், விளையாட்டு மைதானம், உணவகம், வகுப்பறை, நகல் எடுக்கும் கடை என எங்கும் ஆங்கிலத்தை பயன்படுத்தும் வகையில், வித்தையை கற்றுத்தருகிறது.
ஒரே மாதிரி உச்சரிப்புள்ள ஆங்கிலச் சொற்களை அடையாளம் காட்டுகிறது. சரியா, தவறா என்ற மயக்கத்தைத் தரும் சொற்களை குறிப்பிட்டு விளக்கி மயக்கத்தை தடுக்கிறது.
உச்சரிப்பில் தடுமாற்றம் ஏற்படுத்தும் சொற்களைக் குறிப்பிட்டு, எவ்வாறு, எங்கு பயன்படுத்த வேண்டும் என தெளிவாக கூறுகிறது. மாணவர்களுக்கு மட்டுமல்ல, ஆங்கிலத்தில் உரையாட விரும்பும் அனைவருக்கும் உதவும் நுால்.
–- இளங்கோவன்