எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து தரும் நுால். பிறந்த ஊரான, திருச்சி, நம்புகுறிச்சி துவங்கி, கொச்சி, சென்னை, குவைத் பகுதிகளில் நடந்த பயணத்தை, 34 தலைப்புகளில் எளிய நடையில் தருகிறது.
விவசாய குடும்ப பின்னணியில், சிரமங்களுடன் பள்ளிக்கல்வி பயின்று, எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் நம்பிக்கை ஊட்டும் சுவடுகளாக பதிவாகியுள்ளன. முக்கிய திருப்பம் ஏற்படுத்திய நிகழ்வாக, பிரபல இதழாளர் அந்துமணியுடன் சந்திப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் தந்த உறுதியே சாதனைகளுக்கு அடித்தளமிட்டதை குறிப்பிட்டுள்ளது.
சுதந்திரமாக எழுதுவதற்கும், வெளிநாட்டில் பணி ஏற்று பொருளாதாரத்தில் நிறைவு அடைவதற்கும், சேவை செய்வதற்கும் துாண்டுகோலாக அமைந்தது அந்துமணி தந்த நம்பிக்கை தான் என நெகிழ்வுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த டி.என்.சேஷன், சினிமா இயக்குனர் பாலசந்தர் உள்ளிட்ட பிரபலங்களுடனான சந்திப்பு, நெருக்கம் உரிய விளக்கங்களுடன் தரப்பட்டு உள்ளன. கேரள மாநிலத்தில் பணி ஏற்றது, மலையாள மொழியை கற்றது, அதன் வழியாக எழுத்து வாழ்வை சீர்படுத்தியது என சலிப்பற்ற உழைப்பு மற்றும் முயற்சியால் கிடைத்த பலன்களை முன்வைக்கிறது.
புத்தகத்தின் பெரும்பகுதி குவைத் நாட்டில் பணியாற்றிய காலத்தில் கிடைத்த அனுபவங்களின் தொகுப்பாக உள்ளது. அங்கிருந்து செய்த சேவைப் பணிகள் பற்றிய விபரம் வியப்பூட்டுகிறது.
அரசியல், சினிமா, தொழில், அரசு அதிகார மட்டங்களில் பிரபலமாக இருந்தவர்களுடன் கொண்டிருந்த அறிமுகத்தை, சேவை பணிக்கு பயன்படுத்திய சாதுரியம் படிப்பினையாக தரப்பட்டு உள்ளது. தெளிவான குறிக்கோளை வகுத்து திட்டமிட்டால் எண்ணியபடி வாழ்வில் முன்னேற முடியும் என்ற உறுதியை அனுபவமாக காட்டுகிறது. நம்பிக்கை ஊட்டும் வாழ்க்கை வரலாற்று நுால்.
– மலர்