உலகம் தோன்றிய காலத்தில், மனிதன் ஆடை இல்லாமல், நாகரிகமற்ற முறையில் இருந்தான். பின், இலை தழைகளை ஆடையாக்கினான். பச்சை உணவை மாற்ற, நெருப்பை கண்டுபிடித்தான்; வேக வைத்து சாப்பிட்டான். அன்று சாப்பிட்ட பச்சைக்காய், மாமிசம் எல்லாம், இன்று ஆலு கிரேவி, கிரில் சிக்கன், பீஸா, பர்கர் என்று திருநாமங்கள் பெற்று முன்னேற்றம் பெற்றுள்ளன.
இந்த முன்னேற்றம் எப்படி ஏற்பட்டது. உலகின் முதல் நாகரிகம் எது? இன்றைய நாகரிகம் எப்படி இருக்கிறது என்பதை ஆய்வு செய்கிறது இந்த நுால்.
வரலாறு படிப்போர் தான் நாகரிகங்கள் பற்றி அறிய வேண்டும் என்றில்லாமல், மனிதகுலம் எப்படி தழைத்து செழித்தது என்று அறிய விரும்பும் ஒவ்வொருவருக்கும், இந்த நுால் ஒரு தேனாமிர்தமாக இருக்கும்.
பொது அறிவு பெட்டகமாகவும் திகழ்கிறது. நான்கு திசைகளின் நாடு என்று ஒரு கேள்வி போட்டித் தேர்வில் வருமானால், அதற்கான விடை இந்த நுாலில் இருக்கிறது.
ஒரு மணி நேரம் என்பது, 60 நிமிடம், 24 மணி நேரம் ஒருநாள் என்பதை கணித்தது யார்... இது எந்த நாகரிக காலத்தில் உருவாக்கப்பட்டது போன்ற கேள்விகளுக்கு விடை தருகிறது.
பாரத தேசம் கொண்டாடுவது வேதங்களைத் தான். இந்த வேதங்கள் எந்த ஆண்டில் பிறந்தன; வேதகால நாகரிகம் எப்படி இருந்தது என்ற சுவையான தகவல் இடம் பெற்றிருக்கிறது. தமிழும், சமஸ்கிருதமும் இந்த தேசத்திற்கு ஆற்றிய தொண்டுகள் அழகாக படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளன.
பல தேசங்களில் வல்லரசுகள், காலனி ஆதிக்கம் எவ்வாறு நடந்தது என்பதை விலாவாரியாக விவரிக்கிறது. புத்த சமயம், குமரிக்கண்டம் பற்றிய தகவல்கள் எல்லாம் குவிந்து கிடக்கின்றன. அந்தக்கால உலகிலேயே வாழ அழைத்து செல்கிறது. அவசியம் படிக்க வேண்டிய நுால்.
– தி.செல்லப்பா