உ.வே.சா., படைப்புகளை ஆய்வு செய்துள்ள நுால்
செல்லரித்த ஏடுகளை கண்டறிந்து பதிப்பித்த ஆற்றலை, உழைப்பை, உற்று நோக்கிய செயல்பாட்டை முதற்பகுதியில் தந்து இனிக்கச் செய்கிறது. பதிப்பு பணியை துவங்கி சிலப்பதிகாரம், மணிமேகலை, குறுந்தொகை என தமிழ் இலக்கியங்களை மீட்டுருவாக்கியதை குறிப்பிடுகிறது.
பத்துப்பாட்டும், சீவக சிந்தாமணியும் உலா வருவதே உ.வே.சா., அயராத பணியால் தான். சீவகசிந்தாமணியை பதிக்கும் முன், 23 பிரதிகளை ஒப்புநோக்கியதை ஒருவரி செய்தியாக தருகிறது. ஆனால், அதற்கு எத்தனை காலம் பிடித்திருக்கும் என எண்ணும் போது பிரமிப்பு உண்டாகிறது. தமிழ் உலகம் தலைநிமிர உழைத்தவர் உ.வே.சா., என நிறுவும் நுால்.
– சீத்தலைச் சாத்தன்