ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 24, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 168.)
`பாட்டு' என்பதும், `மழை' என்பதும், தானே பொழியும் இயற்கையானது. இரண்டிலுமே ஓசை உண்டு. செயற்கையாக மழையையும், பாட்டையும் வரவழைக்க இயலாது. பாட்டு இலக்கணத்துடன் எழுதினால் தான் காலம் கடந்து அது நிற்கும்! கவிதை எழுதுவது எல்லாருக்கும் வந்து விடாது; ஆனால், கவிதை எழுதத் தொடங்கியவர்கள் கையும் நின்று விடாது, எழுதித் தள்ளிக் கொண்டே இருக்கும்.கவிதை எழுதும் இலக்கணத்தை, பாமரரும் புரிந்து கொண்டு எழுதும் வகையில் எளிமையாக, மிக இனிமையாக கி.வா.ஜகந்நாதன் இந்நூலில் எழுதியுள்ளார். கீற்றுமுடைகிற மாதிரி கவியை முடைய முடியாது. எதுகை மோனை இலக்கணங்களைக் கற்றுக் கொண்ட மாத்திரத்தில் கவி தாராளமாக பாட வந்து விடாது' என்று கி.வா.ஜ., எச்சரிக்கையுடன் தொடங்குகிறார். 40 தலைப்புகளில் படிப்படியாக, எழுதும் முறைகளைக் கூறிக் கொண்டே செல்கிறார். நமது கையைப் பிடித்து எழுத வைத்து, நாமே கவிதை புனையும் அளவு சொல்கிறார். முடிவில் நம்மை இந்நூல் மூலம் கவிஞராக ஆக்கிவிடுகிறார் கி.வா.ஜ., அகவற்பா, ஆசிரியப்பா, வெண்பா போன்ற பாவின் வகைகளையும் விளக்கங்களையும் உதாரணங்களுடன் கூறி விளக்குகிறார் நூலில்.
கலி விருத்தத்தில் நேர் எனத் தொடங்கினால் 11 எழுத்துக்களும், நிறை எனத் தொடங்கினால் 12 எழுத்துக்களும், கட்டளை கலிப்பாவிலும் இதுபோலவே வரும் என்றும் விளக்கி எழுதியுள்ளார். எழுத்து எண்ணிப் பாடும் திறமையை இந்த நூலைப் படித்துப் பெற்றுக் கொள்ளலாம்.