காவ்யா, கோடம்பாக்கம், சென்னை - 24. (பக்கம்: 368)
பாரத ராஜசிங்கம் பக்தர் கொண்டாடும் தங்கம், வீராதி வீரசிங்கம், முத்துராமலிங்கம், வெற்றியே முழங்குவது எங்கும் என்று கவிராயரால் பாராட்டி வாழ்த்தி தெய்வமாய் வணங்கப்பட்ட முக்குலத்துப் பெருமக்களின் நாயகனாம் தேவர் திருமகனது வாழ்வியல் சரிதை நூல் இந்நூல்.
""பத்தரை மாற்றுப் பசும்பொன்'' என்ற தலைப்போடு 146 அதிகாரங்களை நல்ல கட்டமைப்புடன் காவ்யாவிற்கே உரிய அழகோடு வெளியிட்டுள்ளது. தேவரது வீர உரைகள் பக்கத்திற்குப் பக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
""காமராசர் மீது எவரேனும் கை வைக்க நினைத்தால் அவர்கள் நிம்மதியாக வீதிகளில் நடமாட முடியாது.'' (பக்.56)
""திட்டமிட்டபடி அன்னை மீனாட்சியின் கோவிலுக்குள் அரிசன மக்களை அழைத்துக்கொண்டு நானே முன் வருவேன். எதிர்ப்பவர்கள் எவராக இருந்தாலும் முன்வரலாம்.'' (பக்.95)
""பதவியை ஒரு சேவையாக கருதுகிறவர்களிடம் ஆட்சி இருந்தாலன்றி மக்களுக்கு நல்ல பலன் கிடைப்பது அரிது.'' (பக்.265)
""ஆங்கிலத்தைப் படித்தவன் தமிழைப் படிப்பதில்லை; தமிழைப் படித்தவன் ஆங்கிலத்தைப் படிப்பதில்லை; இரண்டையும் படித்தவன் விஞ்ஞானத்தைப் படிப்பதில்லை. அதையும் படித்தவன் மெய்ஞானத்தை அடங்கிப் பார்த்ததில்லை-'' (பக்.235) எனத் தேவரது வீர உரைகளோடு பன்முகப் பார்வையில் தேவரய்யாவின் வாழ்வியல் நிகழ்வுகளை தொகுத்துத் தந்துள்ளார் பேரா.காவ்யா சண்முகசுந்தரம். அரிது முயன்று அரிய புகைப்படங்களோடு புத்தகம் மிளிர்கிறது. பக்கம் 21ல் உள்ள புகைப்பட குறிப்பில் 1992ல் பசுமலை அமெரிக்கன் மிஷன் பள்ளியில் எனத் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1920 என அடுத்த பதிப்பில் திருத்தம் செய்தல் நன்று. அனைவரும் படிக்க வேண்டிய கருவூலம்.