காவ்யா, 16,இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை-24. (பக்கம்: 212.)
திருவள்ளுவர் பற்றிய பல்வேறு தகவல்களையும், செய்திகளையும் கதைகளையும் உள்ளடக்கிய இந்நூல், திருக்குறளின் சீர்மை குறித்து உயர்வாகவே பேசுகிறது. ஆயினும், நூலின் தலைப்பு திருவள்ளுவரை இழிவு செய்வது போல் அமைந்துள்ளது.
திருவள்ளுவர், அவரது பெயரா? அவர் தம் சாதிப் பெயரா? அவர் எங்கே எப்போது யாருக்குப் பிறந்தார்? மனைவி வாசுகி என்பவர் உண்மையில் இருந்தவரா? திருக்குறளை எங்கே அரங்கேற்றினார்? அதற்குத் தடைகள் இருந்தனவா? அவர் தம் வாழ்க்கை எத்தகையது? இத்தகைய வினாக்களை எழுப்பிக் கொண்டு நூலாசிரியர் விடை பகர்ந்துள்ளார்.
திருவள்ளுவர் தமிழர், தமிழகத்தில் வாழ்ந்தவர், திருக்குறளை இயற்றியவர் என்பன தவிர மற்ற அனைத்தும் காலந்தோறும் எழுந்த கட்டுக்கதைகள் என்று நூலில் நிறுவியுள்ளார். திருவள்ளுவரின் திருவுருவமும் கற்பனையே, அக்கற்பனைப் படமும் பலவகையான தோற்றங்களில் வேறுபடுவதையும் காட்டியுள்ளார்.
திருவள்ளுவர் வழியில் நடப்பவர் அரிது. வெறும் முழக்கம் பயன் தராது. வள்ளுவர்கள் பெருகிப் போனார்கள். பயன் தான் வெறுமையாக உள்ளது' என்ற கருத்தை நூல் விரிவாகப் பேசுகிறது.
வள்ளுவர் திருதிரு என்று தான் முழிப்பார் என்று முன்னுரையில் எழுதியுள்ளார். விழிப்பார் என்று தமிழைச் சரியாக எழுதாமல் முழிப்பார் என்று பேச்சு வழக்கில் எழுதியிருப்பதும், பின் பக்க அட்டையில் "இந்நூல்... வள்ளுவர் வெற்றுக் கோஷமும்' என்று வாக்கியத்தை முடிக்காமல் விட்டிருப்பதும் புதுமை உத்திகளா? புதுமை என்ற பெயரில் தமிழைச் சிதைப்பது முறையன்று. ஆய்வுச் செய்திகளுக்காகப் படிக்க வேண்டிய நூல் இது.