உரையாசிரியர்: பழவேரி சக்ரவர்த்தி ராகவஸிம்ஹாசார்யர். பக்கம்: 316+316+316+316+334=1598.(ஐந்து பாகங்கள்)
பல சகஸ்ர நாம ஸ்தோத்திரங்கள் இருந்தாலும், அவற்றுள் விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் பெரியோர்கள் பெருமையாகக் கொண்டாடுவர். மகாபாரத்தில் பீஷ்மர் அம்புப் படுக்கையில் உத்தராயணத்திற்காக காத்திருந்தபோது, ஸ்ரீ கிருஷ்ணர் முன்னிலையில், தருமருக்கு உபதேசித்த ஸ்தோத்திரமே, ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரம்' ஆகும். திருமாலின் 1000 திருநாமங்களையும் இந்நூல் மிக விரிவாக எடுத்துரைக்கிறது.ஓம் பரமாத்மனேநம; என்ற 11வது நாமத்தை விளக்கும் ஆசிரியர்,கடவுள் என்ற சொல்லை `கட+வுள் என்று பிரித்து `எல்லாவற்றையும் கடந்தவர்' என்றும், எல்லாவற்றிற்கும் உள்ளே உள்ளவர் என்றும் பொருள் கூறுவது மிக அருமை (பக்.110).இந்நூல் முழுவதும் பல புதிய கருத்துக்களுடன் 1000 திருநாமங்களை நன்கு விளக்கியுள்ளார். சில நாமாவளிகளுக்கு ஆதி சங்கரரின் விளக்கமும், பராசர பட்டரின் விளக்கமும் கொடுத்துள்ளது நூலுக்குப் பெருமை சேர்க்கிறது.இந்நூல் எங்கு கிடைக்கும் என்ற விவரம் ஐந்து தொகுதிகளிலும் இல்லை. ஆத்திக அன்பர்கள் அனைவரும் படித்துப் பயன் அடைய வேண்டிய அருமையான நூல்.