உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாவது முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600 113. (பக்கம்: 144).
வெற்றிலை, பாக்கு, மஞ்சள், வாழைமரம், தேங்காய், மாவிலை, பூ, பழங்கள், இன்றி தமிழர் இல்ல விழாக்கள், கோயில் திருவிழாக்கள் நடைபெறுவது இல்லை! காலங்கள் மாறலாம், ஆனால், தமிழன் என்றென்றும் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து வந்துள்ளான் என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்!
இந்நிலையில், 5000 ஆண்டுகளுக்கும் முந்தைய, தொன்மையான தொல்காப்பியம் மற்றும் அதன் பின்னர் மலர்ந்த சங்க இலக்கியங்கள் வாயிலாக, பண்டைத் தமிழர், செடி, கொடி, மரம், நீர்த்தாவரம் உள்ளிட்ட தாவரவியல் பற்றிய நுண்ணறிவைப் புலப்படுத்தும் செய்திகள் யாவும் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. இதோ சில சுவைமிகு செய்திகள்:
தாவர இனம் மட்டுமே தமக்குரிய உணவைத் தயாரித்துக் கொள்வதுடன், பிற உயிரினங்களையும் வாழ வைக்கும் உணவுப் பொருட்களையும் வழங்குகிறது. மேலும் மனிதன் நோய்க்கு மருந்து, ஆடை, குடியிருப்புக்கான கூரை, தடுப்புகள், அழகூட்டவும், நறுமணம் கமழவும் உதவியது (பக்:11).
வேம்பும், கடுவும் தமிழரின் ஆதி மருந்துகளாக, கற்ப மருந்துகளாகத் திகழ்ந்தன (பக்.50).
தாவரங்களைச் சார்ந்து மயில், கிளி, புறா, யானை போன்ற உயிரினங்கள் வாழ்ந்து வந்தன (பக்.87).
சேர, சோழ, பாண்டியரின் குடி அடையாளத்தைச் சுட்டும் பூக்களாக பனை, ஆத்தி, வேம்பு திகழ்ந்தன (பக்.25).
தேர்ந்தெடுத்த பொருளின் அடிப்படையில் திறனாய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்ற பின், அதை முன்னிறுத்தி டாக்டர் செ.அரங்கநாயகம் அறக்கட்டளைச் சொற்பொழிவையும், ஆற்றிய பின்னர் தற்போது நூலாகவும் வெளியிட்டுள்ள ஆசிரியர், ஒரே கல்லில் மூன்று மாங்கனிகளை வீழ்த்திய சாதனை வியக்க வைக்கிறது!
ஆயினும், "சங்க காலத்திற்குப் பின்' என்ற தலைப்பில் அமைந்துள்ள கட்டுரையில் (பக்:103, 104, 112) தாவரவியலுக்கு சிறிதளவும் தொடர் பற்ற வரலாறு சார்ந்த நிகழ்வுகளான வட மொழி ஆதிக்கம், வருணாசிரமம், வைதீகக் கடவுள் நெறி, தமிழ்மொழி புறக்கணிப்பு போன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களைத் திரித்தும், திருத்தியும் எழுதுகிறார். சிவன், முருகன், திருமால் என்ற கடவுளர் குறித்து அவதூறு விமர்சனங்களை, எருக்கையும், அரளியையும் குழைத்து, ஒரு சிலரை மகிழ் விப்பதற்காகவே வழங்கியுள்ளார்.
நூலாசிரியரின் கருத்துக்களுக்கு நிறுவனம் பொறுப்பன்று என்ற தமிழக ஆராய்ச்சி நிறுவனத்தின் குறிப்பு காலங்கடந்த, தட்டிக் கழிக்கும் முயற்சி, நகைப்புக்கும் உரியது!
ஜாதி, மதம், இனம், மொழிபால் உள்ள வெறி நீறுபூத்த நெருப்பை ஒத்தது... எரிமலையாக வெடித்துச் சிதறிட ஒரு சிறு பொறி போதுமானது அல்லவா?