மா.சுந்தரமூர்த்தி, 6, சீத்தாராம் நகர், நெய்வேலி மெயின் ரோடு, வடலூர் - 607 303.
முன்னுரையில் ஆசிரியர், புத்தகத்தின் முக்கியத்துவத்தை ஒழுக்கத்திற்கும், பண்புக்கும், குற்றமற்ற தன்மைக்கும் விளக்க எழுதப்பட்டது எனக் குறிப்பிடுகிறார். மொத்தம் 61 தலைப்புகளில், திருக்குறள்கள் மூலம் எளிய முறையில் வாழ்வியலை விளக்குகிறார். கடவுள் யார்? என்று ஆரம்பித்து அகமும் புறமும் அறிதல் என்பதை விளக்கி, மனித உடலையும், உயிரையும் பற்றிக் கூறி, மகிழ்ச்சியாகவும் இன்பமாகவும் எப்படி வாழ்வது என்பதை விளக்குகிறார். வெவ்வேறு மனித உணர்ச்சிகளையும், அதற்கேற்ற குறள்களின் மூலம் விளக்கி தாழ்வு மனப்பான்மையை நீக்கும் வழிமுறைகளை எடுத்துரைக்கிறார். வெளிமனது, உள் மனது இவற்றை அறிவியல் ரீதியாக விளக்கி மனஅழுத்தம், மனப்பதட்டம் இவற்றை நீக்கும் முறைகளையும் விளக்குகிறார். தான் யார் என்ற வினாவிற்கு பல வகைக் கேள்விகள் மூலம் விடை கண்டறியும் விதத்தைக் கூறியுள்ளது, மனோதத்துவ நிபுணர்கள் கூறும் விதங்களை ஒத்துள்ளது. தியானத்தைக் கற்பது எளிது என்று கூறி குறள்கள் மூலம் உதாரணங்கள் குறிப்பிட்டு தியானத்தின் பயன்களை விளக்குகிறார். முதியோர்கள் மற்றும் மாணவர்கள் இவர்களுக்கு ஏற்படும் பல்வேறு இடர்ப்பாடுகளை நீக்கும் வழிகளையும் குறிப்பிட்டிருப்பது புத்தகத்தின் சிறப்பம்சமாகும்.