அல்லயன்ஸ் கம்பெனி, 244, ராமகிருஷ்ணா மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 430)
கலை உலகச் சக்ரவர்த்திகள் முதல் பாகத்தின் மூலம் நம்மைச் சிலிர்க்க வைத்த உமர், இந்த இரண்டாம் பாகத்தின் மூலமும் நம்மை பரவசப்பட வைத்திருக்கிறார்!
எம்.ஜி.ஆர்., சிவாஜி, பி.யு.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம், ரஞ்சன், கே.ஆர்.ராமசாமி, எம்.ஆர்.ராதா, கொத்தமங்கலம் சுப்பு, டி.ஆர்.ராஜகுமாரி, நடிகையர் திலகம் சாவித்திரி ஆகிய பதின்மரைச் சித்தரிக்கும் நூல் இது.
பாகவதர் காலத்தில் இருந்தே, கலை உலகத் தொடர்பு உள்ளவர் உமர். அதனால், தான் நேரில் பார்த்த நிகழ்வுகளையும் இதில் சேர்த்திருக்கிறார். இவர் சொல்லும் பல தகவல்கள் புதுமையானவை.
உதாரணமாக, நிருபர் கேட்கிறார்: உங்க நாடகங்களில் அன்றாட அரசியலைப் பற்றி எல்லாம் அலசி எடுக்கறீங்களே, பத்திரிகை படிக்க உங்களுக்கு எங்கே நேரம் கிடைக்கிறது?
எம்.ஆர்.ராதா பதில் சொல்கிறார்: பத்திரிகையா? நான் பத்திரிகையே படிப்பதில்லை. எனக்கு படிக்கவே தெரியாது. எழுத்துக்களை கம்போஸ் செய்வேன். அதாவது கொட்டை எழுத்துக்களை எழுத்துக் கூட்டிப் படிப்பேன். நான் படிச்சதெல்லாம் உலக அனுபவம் என்ற படிப்பு தான் வேறே பள்ளிக்கூடத்துக்கே நான் போனதில்லே!